ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதியது.
இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மும்பை அணியின் திலக் வர்மா 84 ரன்கள் அடித்து அசத்தினார்.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே விட்டுக்கொடுத்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி 82 ரன்களும், ஃபாஃப் டூ பிளஸ்ஸிஸ் 73 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.







