இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பணிகள் முடிவடைந்த பின்னர், சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்குவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் “1984ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு நாம் செய்த அனைத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டார். இதற்கு நாம் ஒரு தீர்வைக் காண வேண்டும். இல்லாவிட்டால், 2048ல் கூட இலங்கை அப்படியே இருக்கும். நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு பெரும்பான்மையான சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது முக்கியம். அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி இலங்கையின் 75வது சுதந்திர தினத்தில் நம் நாடு ஒரு தீர்வை காண வேண்டும். தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களின் நம்பிக்கையை நாம் வென்றெடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் மக்கள்தொகை 22 மில்லியன் ஆகும். இதில் 75% சிங்களவர்களும், 15% தமிழர்களும் அடங்குவர். அரசியல் சுயாட்சி முறையில் ஒரு பகுதியை அனுமதிப்பதன் மூலம் தமிழர்களின் பாரபட்சமான கூற்றை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக வரலாறு கூறுகிறது. 1987ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் ஆதிக்கம் செலுத்திய தமிழர்கள், ஒரு கூட்டு மாகாண சபை முறையை உருவாக்கினர். ஆனால் இந்த முயற்சி தோல்வியடைந்தது.
1948ஆம் ஆண்டு இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல், தமிழர்கள் சுயாட்சிக்கான கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இது 1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆயுத மோதலாக மாறியது. 1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த 13வது திருத்தச் சட்டம், தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்குகிறது.
இந்நிலையில்தான் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ் மக்களும், பிரதான எதிர்க்கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.







