காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து
காஷ்மீர் வரை செல்லவிருக்கும் பாத யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முறமாக நடைபெற்று வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரிக்கு
இன்று தொகுதி எம்.பி. விஜய் வசந்த் 300 சேர்களை தனது சொந்த நிதியிலிருந்து
வழங்கினார். இதனை அடுத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ
மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தி அங்குள்ள குறைகள் குறித்து கேட்டு
அறிந்தார்.
இதற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஜய் வசந்த் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள ஒரே அரசு ஆயுர்வேத கல்லூரிகளில் நாகர்கோவில்
ஆயுர்வேத கல்லூரிக்கு நாளுக்கு நாள் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் வேண்டுமென
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இதேபோன்று கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொள்ள இருக்கும் பாத யாத்திரைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரியில் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் விஜய் வசந்த்.
இந்திய தேசிய காங்கிரஸ் தனது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை செப்டம்பர் 7, 2022 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தி உட்பட பல்வேறு முக்கிய தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.








