இலங்கை மக்களுக்கு உதவ காவல்துறையினர் முன்வரவேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதேபோல், மனிதாபிமான அடிப்படையில் நிதி வழங்க விரும்பும் காவல்துறையினர், தங்களால் இயன்ற பணத்தை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், நன்கொடை வழங்குபவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு உயர் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்பு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்திருந்த கோரிக்கையில், இலங்கையில் கடும் சிரமத்திற்கு உள்ளான மக்களுக்கு ஒன்றிய அரசின் அனுமதியுடன், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் அங்கு வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் இயன்ற அளவு நன்கொடைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘பட்டினப்பிரவேசம் என்றால் என்ன? பட்டினப்பிரவேசம் எவ்வாறு நடைபெறுகிறது?’
நன்கொடை வழங்க விரும்புவோர் மின்னணு பரிவர்த்தனை மூலம் வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தலைமைச் செயலகத்தின் இந்திய ஓவர்சிஸ் வங்கி கிளையின் சேமிப்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர, காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி எனக்குறிப்பிட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மூலம் நன்கொடை அளிப்பவர்களுக்கு, வருமான வரி விலக்கு பெறுவதறகான அதிகாரபூர்வ ரசீது வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








