முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணம் கொடநாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதா ? – காவல்துறை விசாரணை

திகில் சினிமாக்களை மிஞ்சும் வகையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள்  உள்ளது என அதனை விசாரித்து வரும் தனிப்படை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சிஐடி நகரில் உள்ள விடுதி ஒன்றில் முக்கிய ஆவணங்கள் உள்ளன என ஐடித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் தொலைபேசி மூலம் கிடைக்கிறது. அங்கு சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவைகள் அனைத்தும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  தோழி சசிகலா சம்பந்தபட்ட ஆவணங்கள். இந்த ஆவணங்களில் இருந்துதான் தற்போது கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆம், இவைகள் கொடநாடு பங்களாவில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தமிழக காவல்துறையின் விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக தனிப்படை அதிகாரிகள் சுமார் 200 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் செந்தில்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இவர் சசிகலாவிற்கு குடும்பத்திற்கு நெருக்கமான மணல் குவாரி அதிபர் ஆறுமுகசாமியின் மகன் ஆவார். இவர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை, அதிமுக ஆட்சியில் இவரது கண் அசைவிலேயே பல்வேறு விஷயங்கள் நடந்ததாக கூறப்படுவது உண்டு. மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக வலம் வந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்படிப்பட்ட மனிதரின் மகனைதான் தனிப்படை அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்களே, தனிப்படை அதிகாரிகளின் பார்வை செந்தில்குமார் மீது திரும்ப காரணம் எனக் கூறப்படுகிறது.கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒரு முக்கிய தகவலை பகிர்கிறார்.

அதில் பேசியவர் சென்னை சி.ஐ.டி நகரிலிருக்கும் ஷில்லி நிவாஸ் அப்பார்ட்மெண்ட்டின் அறை எண் 302-ல் சசிகலா தொடர்புடைய சொத்து ஆவணங்கள் இருப்பதாக கூறினார். மறுநாள் அந்த அறைக்குச் மூன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கிருந்து கத்தை கத்தையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அறையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் சசிகலா தரப்பில் ரூ.1,911 கோடி சொத்துக்களை வாங்கியதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும், கடன் பத்திரமும் இருந்துள்ளது.

அதில் ஒரு ஆவணம், விசாரணைக்குள்ளாகியுள்ள  தொழிலதிபர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமார் தொடர்புடையது என்கிறது காவல்துறை. ஆவணங்கள் இருந்த அறை செபாஸ்டீன் என்பவர் பெயரில் புக் செய்யப்பட்டுள்ளது. அவர் வேறொரு செயின் திருட்டு வழக்கு ஒன்றில் சிறையில் இருந்துள்ளார். ஆனால் அவரது அடையாள அட்டையை பயன்படுத்தி அறையானது பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடையவர்கள் பலரும் முன்னாள் குற்றவாளிகள் என்பதால், இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர்தான் நட்பின் காரணமாக செபாஸ்டீன் ஆவணங்களை பெற்று அறைகளை பதிவு செய்து இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய கனகராஜ், அங்கிருந்து கைப்பற்றிய ஆவணங்களை சேலத்தில் உள்ள சிலரிடம் கொடுத்ததாக அவருடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறை விசாரணையில் ஏற்கனவே கூறியுள்ளனர்.

அந்த அடிப்படையில், கொடநாடு பங்களாவில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் எல்லாம் சேலத்தில் கனகராஜ் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் இருந்து சென்னைக்கு வந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இந்த தகவலைதான் மர்மநபர் தொலைபேசி மூலம் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கலாம் என தனிப்படை அதிகாரிகள் சந்தேகின்றனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடந்த 5 நாட்களில் ஒன்றரை கோடி சிறார்களுக்கு தடுப்பூசி: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

Arivazhagan Chinnasamy

மாநில அந்தஸ்து விவகாரம் – புதுச்சேரியில் சூடுபிடிக்கும் அரசியல் களம்

EZHILARASAN D

விசாரணையின்போது பெண்ணை தாக்க முயன்ற எஸ்ஐ பணியிடமாற்றம்

G SaravanaKumar