கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதி எரிந்து உயிரிழந்த நிலையில் தோட்டத்தில் கிடந்த பெண் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமாரி மாவட்டம், ஆற்றூர் அருகே செறுகோல் நான்காம் தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி செல்வி(57). இவருக்கு ஸ்டாலின் தாஸ் என்ற மகனும், ஷைனி என்ற மகளும் உள்ளனர். செல்வி கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் மன உளைச்சலுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதியிலுள்ள தோப்பில் பாதி எரிந்து உயிரிழந்த நிலையில் செல்வி கிடந்துள்ளார். மேலும் அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து மோப்ப நாய் குக்கி வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் போலீசார் சம்பவ இடத்தில் காணப்பட்ட இரண்டு மண்ணெண்ணெய் பாட்டில்களை வைத்து இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
– அனகா காளமேகன்







