திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செயல்படாமல் உள்ள ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்தது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கண்டோன்மெண்ட் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகம், எதிரே அடையாளம் தெரியாத நபரின் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. திருச்சி, காண்டோன்மெண்ட் உதவி ஆணையர் அலுவலகம் எதிரே ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது, தற்பொழுது பேருந்துகள் நிறுத்த அனுமதிக்கப்படாத நிலையில் இரவு நேரங்களில் மது அருந்துபவர்களின் கூடாரமாக செயல்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாநகர துணை ஆணையர் ஸ்ரீதேவி, உதவி ஆணையர் கென்னடி உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்த நபரின் பின் தலை சிதைக்கப்பட்டும், கழுத்து பகுதி அறுபட்ட நிலையிலும் உடல் மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் சோனை நடத்தினர். பின்னர் விசாரணையில் அந்த நபர் திருச்சி, பீமா நகரை சேர்ந்த ராஜ் என்பவரின் மகன் ரமேஷ் (41) எ்ன்பது தெரியவந்தது.
மேலும் உயிரிழந்த நபரை யாரேனும் கொலை செய்து இங்கு வீசி சென்றனரா? அல்லது மது அருந்தும் பொழுது தகராறு ஏற்பட்டு கொலை செய்துள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
—அனகா காளமேகன்







