மயிலாடுதுறையில் 9 வயது சிறுவனுக்கு மது ஊற்றி குடிக்க வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுவனுக்கு இளைஞர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் இருந்த சிறுவனை தூக்கிக்கொண்டு மயிலாடுதுறை காவல் நிலையம் வந்து அச்சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் தன் மகன் மற்றும் மற்றொரு சிறுவனுக்கு மதுவை ஊற்றி குடிக்க வைத்ததாகவும் இதனால் மது போதையில் சிறுவன் மயக்க நிலைக்கு சென்றுள்ளதாகவும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். உடனடியாக மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிறுவனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுவனுக்கு மது ஊற்றிக் கொடுத்தாக கூறப்படும் அறிவழகன் என்பவரை போலிசார் தேடி வந்த நிலையில், இன்று மயிலாடுதுறை போலீசாரால் அறிவழகன் கைது செய்யப்பட்டார்; போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது குடித்ததால் மயக்கம் ஏற்பட்ட சிறுவனுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறுவனது உடல்நலம் தேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
– சே.அறிவுச்செல்வன்







