தமிழகத்தில் மழலையர் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள பாமக, சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அதில், 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்றும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும் என்றும், வருமான வரம்பின்றி, அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அனைத்து விளைபொருட்களும் அரசால் கொள்முதல் செய்யப்படும் என்றும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், வேளாண்மை சார்ந்து 4 அமைச்சகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நிர்வாக வசதிக்காக 2 வது தலைநகராக திருச்சியும், 3 வது தலைநகராக மதுரையும் அறிவிக்கப்படும் என்றும், தொழில்நகரமாக கோவை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







