திமுக கூட்டணி வெற்றிக்கு பாமக மாவட்ட செயலாளர்கள் பாடுபட்டதாக அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திண்டிவனம், செஞ்சி, மயிலம், வானூர் தொகுதிகளின் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், 1986-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, இன்று வரை தமிழ்நாட்டில் அசைக்க முடியாத மூன்றாவது பெரிய கட்சியாக விளங்குவதாக தெரிவித்தார்.
திமுக, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடையும் அளவிற்கு சென்றுள்ளதாகக் கூறிய அவர், பாமக மாவட்ட செயலாளர்கள்தான் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு வேலை செய்து அவர்களை வெற்றி பெற வைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இனி வரும் தேர்தல்களில் திண்ணைப் பிரச்சாரம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களை சந்தித்து பாமக விற்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.







