10.5% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் சமூக நீதியை மீட்டெடுக்க அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
10.5 சதவிகித உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக நீதிமன்றம் எழுப்பிய 6 கேள்விகளுக்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக் கூறி 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமியர்கள், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுகளுக்கு தடை விதிக்காத நிலையில், 10.5 % உள் ஒதுக்கீட்டுக்கு மட்டும் உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார். உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சமூகநீதியை பாதுகாக்க தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்டு என்பதால், அதனை அவர் மீட்டெடுப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டிருந்த 10.5% உள்ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்கான அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.








