தேர்தலில் வெற்றி பெற மமதா வன்முறையை ஏவி விடுகிறார் – பிரதமர் மோடி!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மமதா பானர்ஜி, வன்முறையை ஏவி விடுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 44 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான நான்காம்…

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மமதா பானர்ஜி, வன்முறையை ஏவி விடுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 44 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, கூச் பெஹர் மாவட்டத்தில் உள்ள சிட்டல்குச்சி தொகுதியில் இருவேறு பகுதியில் பாஜக மற்றும் திரிணாமுல் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடு நடத்திவுள்ளனர். இதில், 18 வயது நபர் உட்பட திரிணாமுல் கட்சியினர் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மமதா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் உள்ள துணை ராணுப்படையினர் மீது மத்திய உள்துறை அமைச்சகம் தனது கட்டுபாட்டை அதிகமாக செலுத்தி வருவதால்தான், தங்கள் கட்சியினர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர் என மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என திரிணாமுல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மமதா பானர்ஜி வன்முறையை ஏவி விடுவதாக குற்றம்சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தினார். வன்முறையை கையில் எடுப்பதன் மூலம், பாதுகாப்பு பெற முடியாது என்பதை மமதா பானர்ஜி உணர வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து சிறப்பு அதிகாரிகள் அளித்த தகவலின்படி, சிட்டல்குச்சி தொகுதியில் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் நிறுத்திவைத்துள்ளது. முழு விவரங்களை மாநில தேர்தல் ஆணையர், மாலை ஐந்து மணிக்குள் தலைமை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.