பிரதமர் நரேந்திர மோடி இன்று அவர் தனது 76வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவார்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பிரதமருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளும் நல்வாழ்த்துக்களும். கடந்த 25 ஆண்டுகளில், முதலமைச்சர் மற்றும் பிரதமராக நீங்கள் பதவி வகித்த காலத்தில், நல்லாட்சிக்கான பல புதிய அளவுகோல்களை நிலைநாட்டி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முன் எப்போதும் இல்லாத உத்வேகத்தையும் புதிய திசையையும் அளித்துள்ளீர்கள். கலாச்சாரப் பெருமித உணர்வுடன் நவீன முன்னேற்றப் பாதையில் நீங்கள் முன்னேறிச் செல்லும்போது, நமது நாட்டு மக்கள் பாரம்பரியத்திற்கும் வளர்ச்சிக்கும் இடையிலான நல்லிணக்கத்தை உணர்ந்து வருகின்றனர். நீங்கள் சிறந்த உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து, தங்களது பொதுச் சேவை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை அயராது முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளதாவது, “மோடிஜியின் தலைமையில், பயங்கரவாதத்திற்கு எதிரான ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கை முதன்முறையாக களத்தில் செயல்படுத்தப்படுவதை நாடு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370-இன் நீக்கம், துல்லியத் தாக்குதல்கள், வான்வழித் தாக்குதல்கள், மற்றும் ஆபரேஷன் சிந்துர் போன்ற இந்த முடிவுகள், இந்தியா இனி வெறுமனே கண்டனம் செய்வதோடு நின்றுவிடாமல், தீர்க்கமான பதிலடிகளையும் கொடுக்கிறது என்பதை உலகிற்குக் காட்டியுள்ளன. நக்சலிசம் ஒழிக்கப்பட்டுள்ளது, வடகிழக்கில் பல தசாப்தங்களாக இருந்த சர்ச்சைகள் அமைதி ஒப்பந்தங்கள் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன, மேலும் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. ஒரு வளமான இந்தியாவிற்கு பாதுகாப்பான இந்தியாவே முதல் முன்நிபந்தனை; இதை மோடிஜி நிரூபித்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்ராலின்,
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும் திகழ வாழ்த்துகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
நமது மாண்புமிகு பிரதமருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.தங்களது தீர்க்கமான தலைமைத்துவமும், தேசத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் இந்தியாவின் முன்னேற்றத்தையும் செழிப்பையும் தொடர்ந்து வலுப்படுத்துகின்றன. உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், நமது தேச சேவையில் தொடர்ச்சியான வலிமையும் கிடைக்க வாழ்த்துகிறேன்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,
தேசத்தின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் தனது தொலைநோக்குச் சிந்தனையாலும், அயராத உழைப்பாலும் முன்னெடுத்துச் சென்று, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையையும் வலிமையையும் உயர்த்திப் பிடித்து வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘வளர்ந்த பாரதம்’ என்ற உயரிய இலக்கை நோக்கி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டு தொடர்ந்து உழைத்து வரும் அவர்களின் பொதுவாழ்வுப் பணி மேலும் சிறக்கட்டும். மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், மனநிறைவுடனும் தொடர்ந்து தேசத்திற்கு சேவையாற்ற, எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டிக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி,
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளைப் படைக்கவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.




