ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
ஜி7 நாடுகளின் மாநாடு ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்-ல் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜி7 அமைப்பில் அங்கம் வகிக்கும் ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் நேற்று தொடங்கிய முதல் நாள் மாநாட்டில் பங்கேற்றன.
அர்ஜென்டினா, இந்தியா, இந்தோனேஷியா, செனகல், தென் ஆப்ரிக்கா, உக்ரைன் ஆகிய நாடுகள் இந்த மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டை நடத்தும் ஜெர்மனியின் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் விடுத்த அழைப்பை ஏற்று நேற்று ஜெர்மனி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, முனிச் நகரில் இந்தியர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
இதையடுத்து, ஜி7 மாநாடு நடைபெறும் ஸ்க்லோஸ் எல்மாவ்-க்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, ஓலாப் ஸ்கோல்ஸ் கைகுலுக்கி வரவேற்றார்.
இதன் தொடர்ச்சியாக ஜி7 மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் உள்ளிட்டோர் பிரதமர் மோடியைச் சந்தித்து கலந்துரையாடினர்.
மாநாட்டில் பேசிய ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ், உலக நலனுக்காக நாம் அனைவரும் இணைந்துள்ளோம் என்றும், ஜனநாயகத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சி மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் கூறினார்.
ஜி7 நாடுகள் பல்வேறு சவால்களை தற்போது சந்தித்து வருவதாகத் தெரிவித்த ஓலாப் ஸ்கோல்ஸ், பொருளாதார வளர்ச்சி சரிவு, பணவீக்கம், உணவுப் பொருட்கள் பற்றாக்குறை போன்ற நாம் எதிர்கொள்ளும் சவால்கள் சாதாரணமானவை அல்ல என்றார். எனவே, நம் அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். எனவே, ஒரே குழுவாக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.