பிரதமர் நரேந்திர மோடி, வரும் 16ம் தேதி நேபாளம் செல்ல இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு 5வது முறையாக வரும் 16ம் தேதி நேபாளம் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேபாளின் லும்பினி நகருக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள மாயாதேவி ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்ள இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேபாள அரசின் ஆதரவுடன் இயங்கும் லும்பினி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ள புத்த ஜெயந்தி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் உள்ள சர்வதேச புத்த கூட்டமைப்புக்குச் சொந்தமான நிலம் லும்பினியில் உள்ளது. இந்த நிலத்தில், புத்த கலாச்சார மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தியூபாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்திய – நேபாள உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையே தொடர்ச்சியாக நடைபெறும் பாரம்பரிய சந்திப்பின் ஒரு அங்கமாக நரேந்திர மோடியின் பயணம் இருக்கும் என்றும் அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை எனும் இந்தியாவின் கொள்கையை பிரதிபலிக்கும் வகையில் இது இருக்கும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு, இரு நாட்டு மக்களுக்கு இடையே உள்ள மிக நீண்ட நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.