மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி தனது ஒன்றரை மணி நேர உரையில் பேசாததை கண்டித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றினார். எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடவுளின் ஆசீர்வாதமாக கருதுவதாகவும், நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு தமது நன்றியை தெரிவிக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் தம்மை மிக மோசமாக விமர்சித்ததாகவும், அவர்களின் கீழ்தரமான வசை மொழிகளை வாழ்த்துகளாக எடுத்துக் கொள்வதாக கூறினார். முக்கிய மசோதாக்கள் கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவும், நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை எனவும் பிரதமர் சாடினார்.
எதிர்க்கட்சிகள் ‘நோ பால்’களை மட்டும் போட்டுக்கொண்டு இருப்பதாகவும், நாங்கள் சதம் மற்றும் சிக்ஸர் அடித்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் எனவும், இதேபோன்று 2028-ல் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது, உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என பிரதமர் சூளூரைத்தார்.
தமிழ்நாட்டில் 1964-க்கு பிறகு காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதாகவும், இதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களிலும் அக்கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதாகவும் விமர்சித்தார். பொதுத்துறை வங்கி, எல்ஐசி ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்த நிலையில், தற்போது இவைகள் சிறப்பாக இயங்கி வருவதாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தியா கூட்டணி அல்ல, ஈகோ கூட்டணி என விமர்சனம் செய்த அவர், தேசிய முற்போக்கு கூட்டணியை புதைத்து, அதற்கான இறுதி அஞ்சலி கூட்டத்தை பெங்களூருவில் மகிழ்ச்சியுடன் நடத்தி, புதிய பெயரில் கூட்டணியை அறிவித்துள்ளதாக சாடினார்.
ஏழைத்தாயின் மகன் இன்று பிரதமராக உள்ளதை எதிர்கட்சிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனக்கூறிய அவர், காங்கிரஸ் எப்போதும் தோல்வியடையும் திட்டத்தை தான் செயல்படுத்துவார்கள், அதனை தொடர்ந்து செய்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் பேச்சை தொடங்கி ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக மணிப்பூர் பற்றி பேசாததால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.







