”நீங்கள் No Ball போடுகிறீர்கள் நாங்கள் சதம் அடித்துக்கொண்டிருக்கிறோம்” – நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலுரை!

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய பிரதமர் மோடி நீங்கள் No Ball போடுகிறீர்கள் நாங்கள் SIX அடிக்கிறோம், சதம் அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். நம்பிக்கையில்லா தீர்மானம்…

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய பிரதமர் மோடி நீங்கள் No Ball போடுகிறீர்கள் நாங்கள் SIX அடிக்கிறோம், சதம் அடித்துக்கொண்டிருக்கிறோம் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசியதாவது:

கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். அவர்களில் சிலருடைய பேச்சுக்களை நானே நேரடியாக கேட்டேன். எங்கள் மீது நம்பிக்கையை வைத்த நாட்டு மக்களுக்கு இன்று நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 2018ம் ஆண்டும் எதிர்க்கட்சிகள் எனது தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்கள்.

நான் 5 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் மீண்டும் இதை செய்வார்கள் என சரியாக கணித்திருந்தேன். மக்களுக்கு எதிர்க்கட்சிகள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. கடந்த 2018ம் ஆண்டும் எங்கள் மீது எதிர்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருந்தது அதனால்தான் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தோம்.

வரும் 2024ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியும் – பாஜகவும் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்து மீண்டும் ஆட்சிக்கு வரும். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எங்கள் மீதான நம்பிக்கையை நிரூபிப்பதற்கானது அல்ல இது உண்மையில் எதிர்க்கட்சிகளுக்கானது.

எதிர்கட்சிகள் கொண்டுவந்த இந்த நம்பிக்கை எல்லாம் தீர்மானத்தை நான் கடவுளுடைய ஆசிர்வாதமாகத் தான் காண்கிறேன். நாங்கள் கொண்டு வந்திருக்க கூடிய தரவுகள் பாதுகாப்பு மசோதா என்பது நாட்டு மக்களுக்கு மிகவும் அவசியமாகிறது ஆனால் அதை நீங்கள் கைவிட சொல்கிறீர்களா?

எதிர்காலம் என்பது தொழில்நுட்பத்தால் இயங்கப் போகின்றது அதற்கு இப்போது நாங்கள் கொண்டு வந்திருக்கும் மசோதாக்கள் பலனுடையதாக இருக்கும். எதிர்க்கட்சிகளான நீங்கள் எல்லா தருணத்திலும் மக்களுக்கு துரோகத்தை செய்திருக்கிறீர்கள். தற்போதும் நாட்டு மக்களின் நலனுக்காக நாங்கள் மசோதாக்களை கொண்டு வந்தால் அதை தடுப்பதன் மூலம் மீண்டும் துரோகத்தை செய்கிறீர்கள்.

நீங்கள் செய்யும் அரசியல் உங்களது மனநிலையை காட்டுகிறது. எவற்றிலெல்லாம் அரசியல் செய்யக் கூடாதோ அவற்றில் எல்லாம் எதிர்கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். கட்சியை விட தேசம் முக்கியம் என்று மனதில் கொள்ள வேண்டும், நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது.

எதிர்க்கட்சிகள் அதிகார பசியில் இருக்கிறார்கள் அவர்களுடைய பசிக்கு ஏழைகளை உணவாக கேட்கிறார்கள். ஒருமுறை NO BALL போட்டால் பரவாயில்லை நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப NO BALL போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் கொஞ்சமாவது தயாராக மாட்டீர்களா.

நீங்கள் நோ -பால் போடுகிறீர்கள் நாங்கள் சிக்ஸ் அடிக்கிறோம், சதம் அடித்துக்கொண்டிருக்கிறோம். உங்களுக்கு ஐந்து ஆண்டுகள் கொடுத்தோம் ஆனால் நீங்கள் இன்னமும் தயாராகாமலே இருக்கிறீர்கள். ஊழல் கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து எங்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள்.

மக்களவையின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிரஞ்சன் சவுத்ரி இருக்கிறார். ஆனால் அவருக்கு பேச கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் எதிர்க்கட்சிகளால் ஒதுக்கப்பட்டு விட்டார்.

21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது. இது ஒரு பொன்னான வாய்ப்பு. எனவே, நாங்கள் இப்போது செய்யும் பணி அடுத்த 1000 ஆண்டுகளுக்கு தாக்கம் நிறைந்ததாக இருக்கும். இந்தியாவின் இளைய தலைமுறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதனால் தான் இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.

அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமைமிக்க இந்தியாவை கட்டமைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதல பாதாளத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை நாங்கள் உயர்த்திக் கொண்டு வந்துள்ளோம். ஊழலற்ற இந்தியாவை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இளைஞர்களுக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். அந்நிய நேரடி முதலீடு, ஏற்றுமதி என பல துறைகளில் சாதனைகளை முறியடித்துள்ளோம். எங்களது இந்த சாதனைகள் தான் எதிர்க்கட்சிகளுக்கு வேதனையை கொடுத்திருக்கிறது.

இந்தியா ஸ்திரமான நிலைத்தன்மையுடன் இருக்கிறதே என சிலருக்கு வருத்தத்தை கொடுத்திருக்கிறது. இந்த நாட்டு மக்களுக்கு லஞ்சம், ஊழலற்ற ஆட்சியை வழங்கியுள்ளோம். வறுமைகோட்டுக்கு கீழிருந்து மக்களை மீட்டெடுத்த மற்றும் மீட்டெடுக்கும் பணிகள் தொடர்பாக IMF இந்தியாவை பாராட்டியுள்ளது

ஜல் ஜீவன் திட்டத்தை WHO பாராட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 13.5 கோடி பேரை நாங்கள் வறுமையில் இருந்து மீட்டிருக்கிறோம்.தூய்மை இந்தியா திட்டத்தை உலக சுகாதார அமைப்பு பாராட்டி உள்ளது. இந்தியாவின் மதிப்பை உலக அளவில் மாற்றியுள்ளோம். ஆனால் சிலர் இந்தியாவை மீண்டும் பாதாளத்தில் தள்ளவே முயற்சிக்கின்றனர். நாடு வளர்ச்சி அடைவது எதிர்க்கட்சிகளுக்கு பதற்றத்தை கொடுக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு நாட்டின் வளர்ச்சி மீது நம்பிக்கை இல்லை.

கடந்த மூன்று நாட்களாக எதிர்க்கட்சிகள் என்னை மிக மோசமாக, கடுமையாக விமர்சித்தார்கள். விமர்சனம் செய்வதில் மிக கீழ்தரமான நிலையை அவர்கள் அடைந்திருக்கிறார்கள். என்னை அவதூறாக பேசுவது எதிர்க்கட்சிகளுக்கு டானிக் குடிப்பது போல இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளின் வசை மொழிகளை நான் வாழ்த்துகளாக எடுத்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அற்புத சக்தி உள்ளது. ஏனெனில் அவர்கள் யாரை எல்லாம் வசைபாடுகிறார்களோ அவர்கள் எல்லாம் பெரிய அளவில் வளர்ந்து விடுவார்கள். இந்திய பொதுத்துறை வங்கிகள் தங்களது லாபத்தை இரண்டு மடங்காக ஆக்கி இருக்கிறது. ஆனால் அவற்றை மறைத்து விட்டு இந்திய வங்கித் துறைகள் நஷ்டத்தில் இயங்குவதாக பொய் கூறுகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக என்னை அவமானமாக பேசுவதும், வசை பாடுவது தான் எதிர்க்கட்சிகள் வேலையாக இருந்துள்ளது. எதிர்கட்சிகள் HAL நிறுவனத்தின் கதை முடிந்து விட்டது என கூறினார்கள், வசைபாடினார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளின் அந்த அற்புத சக்தி அங்கு மீண்டும் வேலை செய்தது. ஏனெனில் தற்போது, ஹெச்.ஏ.எல் நிறுவனம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதேபோல, எல் ஐ சி குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்தார்கள் மீண்டும் அவர்களது அற்புத சக்தி வேலை செய்து எல்.ஐ.சி இப்போது மிகச் சிறப்பாக செயல்படுகிறது. எனவே, எனது 3வது முறை ஆட்சியின்போது இந்தியா உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கும்.

எதிர்கட்சிகளுக்கு எந்த இலக்கும் கிடையாது. நாட்டை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற எந்த திட்டமும் கிடையாது. அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் எனவும் தெரியாது. ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் எங்களை எதிர்க்க ஒன்று சேர்ந்திருக்கிறதாக கூறுகிறார்கள்.

கடந்த 70 வருடங்களாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி உறங்கி கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு கடின உழைப்பின் மீது எப்போதும் நம்பிக்கை கிடையாது. காங்கிரஸ் கட்சியில் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட Visionary தலைவர்களும் கிடையாது.

ஆனால் நாங்கள் அப்படியல்ல , சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும், அது குறித்நு சிந்திக்க வேண்டும், அதனை செயல்படுத்த வேண்டும் என்ற கொள்கை உள்ளது, அதுவே தாரக மந்திரமாகவும் உள்ளது . எதிர்க்கட்சிகள் 2028ம் ஆண்டும் எங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவார்கள்.

டிஜிட்டல் இந்தியா திட்டம் வந்தபோது இந்திய மக்களுக்கு அலைபேசிகளை எப்படி பயன்படுத்துவது என கூட தெரியாது, இதெல்லாம் செயல்படாது என கூறினார்கள்.  ஆனால் இன்று டிஜிட்டல் இந்தியா திட்டம் நாட்டில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடவடிக்கை எடுத்தபோது காங்கிரஸ் கட்சி அதைகொண்டு மோசமான அரசியலை செய்தார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிராக காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் செய்ததில்லை. பாகிஸ்தான் என்ன கூறுகிறதோ அதைத்தான் காங்கிரஸ் கட்சியும் நம்பும்.

இப்படி பிரதமர் மோடி பேசி வந்த நிலையில், குறுக்கிட்ட எதிர்கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து பேசுங்கள் மணிப்பூர் பற்றி பேசுங்கள் என முழக்கமிட்டனர்.

கூச்சலுக்கு இடையே தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:

அதேபோல உத்தரபிரதேசம், குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களில் 1985ம் ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்து வருகிறார்கள். திரிபுராவில் 1988ம் ஆண்டிலிருந்து மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்து வருகிறார்கள்.

அதேபோல ஒடிசா, நாகாலாந்து மாநிலங்களிலும் மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துவிட்டனர். குறிப்பாக 1995லிருந்து ஒடிசா மாநிலத்தில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொடுத்து வருகிறார்கள். 1988ற்கு பின்னர் நாகலாந் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்து வருகிறார்கள்.

ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொடுத்து வருகின்றனர். 1964க்கு பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தேசிய முற்போக்கு கூட்டணி (UPA)இறந்து புதைக்கப்பட்டு விட்டது. ஆனால் அதை நீங்கள் கொண்டாடுகிறீர்கள்

UPA கூட்டணி இறந்ததற்கான இறுதி அஞ்சலி பெங்களூருவில் அனுசரிக்கப்பட்டது ஆனால் அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் செய்திருக்கிறீர்கள். வடமாநிலங்கள் மட்டும் தான் இந்தியா என திமுக அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.

தமிழ்நாடு பக்தி நிறைந்த மாநிலம். வட இந்தியாதான் இந்தியா என்கிறார் திமுக அமைச்சர் ஒருவர். தமிழ்நாடு இந்தியாவின் அங்கம் இல்லையா? தமிழ்நாடு மண் ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர், அப்துல் கலாம் ஆகியோரை கொடுத்தது. அந்த தமிழ்நாட்டை எப்படி பிரித்து பார்க்க முடியும்.

காந்தி என்ற பெயரை நேரு குடும்பத்தினர் பயன்படுத்துவது குறித்து பிரதமர் விமர்சனம்

காங்கிரஸ்-க்கு என்று ஒரு orginality கிடையாது. நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களுக்கு எல்லாம் அவர்களின் குடும்பத்தினர் பெயர்களை வைத்து வந்தனர். காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம். அவர்களின் கொடி சின்னம் உள்ளிட்டவையும் திருடப்பட்டது தான்.

எதிர்க்கட்சி கூட்டணியில் அனைவருமே பிரதமர் வேட்பாளர்கள் தான். எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைக்கனம் பிடித்த கூட்டணி.

இவ்வாறு பிரதமர் மோடி ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பேசிவந்த போது, இன்னமும் அவர் மணிப்பூர் என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

கூச்சலுக்கு இடையே தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:

இலங்கை ஹனுமானால் அழிக்கப்படவில்லை. மாறாக ராவணனின் தலைகணத்தால் தான் அழிந்தது என சிலர் சொன்னார்கள் அது சரியே. ஏனெனில், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 400லிருந்து 40 ஆக குறைந்துள்ளது அதை இதனுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். உங்களின் அகங்காரத்திற்கு 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். ஏழைத்தாயின் மகன் இன்று பிரதமராக உள்ளேன். ஆனால், ஒரு ஏழைத் தாயின் மகன் பிரதமராக இருப்பதை எதிர்கட்சிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

காங்கிரஸ் எப்போதும் தோல்வியடையும் திட்டத்தை தான் செயல்படுத்துவார்கள், அதை தொடர்ந்து செய்கிறார்கள். ராகுல் காந்தி 24 மணி நேரமும் என்னைப் பற்றிய நினைத்துக் கொண்டிருக்கிறார். கொள்ளை பொருட்களின் கடை மற்றும் பொய்களின் சந்தையே காங்கிரஸ் கட்சி.

மணிப்பூர் தொடர்பாக பிரதமர் மோடி பேசாததையடுத்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இதனை அடுத்து மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச தொடங்கினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

மணிப்பூர் மாநிலத்தின் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய உள்துறை அமைச்சர் மேற்கொண்டார். மணிப்பூர் மாநிலத்தில் நிச்சயம் முழுஅமைதி திரும்பும் என நான் முழுமையாக நம்புகிறேன். நீதிமன்றத்தில் ஒரு உத்தரவு தான் மிகப்பெரிய வன்முறையை தூண்டிவிட்டுள்ளது. மாநில அரசும், மத்திய அரசும் அந்த மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் நடந்து வருகிறது. மணிப்பூர் மாநில மக்களுடன் ஒட்டுமொத்த இந்தியாவும் உள்ளது. பாரத மாதா குறித்து மிக மோசமான முறையில் ஏன் சிலர் பேசினார்கள். அந்த வார்த்தைகளால் ஒட்டுமொத்த இந்தியாவும் மிகவும் வருத்தம் அடைந்துள்ளது

பாரத மாதா குறித்து பேசியதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தமிழ்நாட்டில் பாரதமாதாவிற்கு பூஜை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. வந்தே மாதரம் என்ற முழக்கத்தையும் காங்கிரஸ் கட்சி அவமானம் செய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கச்சத்தீவு மீட்பு குறித்து கடிதம் எழுதியிருந்தார். நமது நாட்டுக்கு சொந்தமான இடத்தை இன்னொரு நாட்டிடம் ஒப்படைத்தவர்கள் யார். அந்த நேரத்தில் யார் பிரதமராக இருந்தது. இந்திரா காந்தியின் பெயரால்தான் நமது நிலம் இன்னொரு நாட்டிடம் கொடுக்கப்பட்டது.

1966 ஆம் ஆண்டு மிசோரம் மாநில மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னின்று நடத்திய தாக்குதலுக்கு உள்ளானார்கள். இந்திய விமானப்படை மூலமாக அந்த மாநில மக்களை தாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி என்ன பதில் சொல்லப்போகிறது?

தற்போது மணிப்பூரில் தவறு இழைத்தவர்களை நாங்கள் வெறுமனே விடமாட்டோம். பிரதமர் நேரு வேண்டுமென்றே வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்தார். அவருக்கு வடகிழக்கு மாநிலங்கள் மீது அக்கறை இல்லை என ஒரு முறை ராம் மனோகர் லோகியா வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

1962ம் ஆண்டு பிரதமர் நேரு அசாம் மாநில மக்களுக்கு துரோகம் செய்தார், அவருக்கு வடகிழக்கு மாநிலங்கள் மீது அக்கறை இருந்ததில்லை. அருணாச்சல் பிரதேசத்தில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட்டது, வடகிழக்கு மாநிலங்களில் வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு ஒரு வாய்ப்பு வழங்கினோம் அதை எதிர்க்கட்சிகள் தவற விட்டுவிட்டார்கள். இந்த முறையும் அவர்கள் தவற விட்டுவிட்டனர். ஆனால் வரும் 2028ல் அவர்கள் தயாராவார்கள் என்று நம்புகிறேன். எதிர்கட்சிகள் கொஞ்சம் மூளையை பயன்படுத்தி சிந்தியுங்கள்.

மக்களவை முக்கியமான விவாதத்திற்கான தளம், இதனை வெறுமென உலாவுவதற்காக இடமாக பயன்படுத்த முடியாது. இதனை உங்களது மோசமான அரசியலுக்காகவும் பயன்படுத்தவும் முடியாது. நாங்கள் தலை குனியவும் மாட்டோம் எங்கள் பாதையில் இருந்து விலகவும் மாட்டோம். இந்தியா உடைவதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.