நாட்டையே உலுக்கிய மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி என்ன பேசினார்? முழு விவரம் இங்கே…!

மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து பதில் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், மணிப்பூரில் தவறு இழைத்தவர்களை நாங்கள் வெறுமனே விடமாட்டோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின்…

மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து பதில் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், மணிப்பூரில் தவறு இழைத்தவர்களை நாங்கள் வெறுமனே விடமாட்டோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:

மணிப்பூர் மாநிலத்தின் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய உள்துறை அமைச்சர் மேற்கொண்டார். மணிப்பூர் மாநிலத்தில் நிச்சயம் முழுஅமைதி திரும்பும் என நான் முழுமையாக நம்புகிறேன். நீதிமன்றத்தில் ஒரு உத்தரவு தான் மிகப்பெரிய வன்முறையை தூண்டிவிட்டுள்ளது. மாநில அரசும், மத்திய அரசும் அந்த மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் நடந்து வருகிறது. மணிப்பூர் மாநில மக்களுடன் ஒட்டுமொத்த இந்தியாவும் உள்ளது. பாரத மாதா குறித்து மிக மோசமான முறையில் ஏன் சிலர் பேசினார்கள். அந்த வார்த்தைகளால் ஒட்டுமொத்த இந்தியாவும் மிகவும் வருத்தம் அடைந்துள்ளது

பாரத மாதா குறித்து பேசியதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தமிழ்நாட்டில் பாரதமாதாவிற்கு பூஜை செய்வது தடுக்கப்பட்டுள்ளது. வந்தே மாதரம் என்ற முழக்கத்தையும் காங்கிரஸ் கட்சி அவமானம் செய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கச்சத்தீவு மீட்பு குறித்து கடிதம் எழுதியிருந்தார். நமது நாட்டுக்கு சொந்தமான இடத்தை இன்னொரு நாட்டிடம் ஒப்படைத்தவர்கள் யார். அந்த நேரத்தில் யார் பிரதமராக இருந்தது. இந்திரா காந்தியின் பெயரால்தான் நமது நிலம் இன்னொரு நாட்டிடம் கொடுக்கப்பட்டது.

1966 ஆம் ஆண்டு மிசோரம் மாநில மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னின்று நடத்திய தாக்குதலுக்கு உள்ளானார்கள். இந்திய விமானப்படை மூலமாக அந்த மாநில மக்களை தாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி என்ன பதில் சொல்லப்போகிறது?

தற்போது மணிப்பூரில் தவறு இழைத்தவர்களை நாங்கள் வெறுமனே விடமாட்டோம். பிரதமர் நேரு வேண்டுமென்றே வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்தார். அவருக்கு வடகிழக்கு மாநிலங்கள் மீது அக்கறை இல்லை என ஒரு முறை ராம் மனோகர் லோகியா வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

1962ம் ஆண்டு பிரதமர் நேரு அசாம் மாநில மக்களுக்கு துரோகம் செய்தார், அவருக்கு வடகிழக்கு மாநிலங்கள் மீது அக்கறை இருந்ததில்லை. அருணாச்சல் பிரதேசத்தில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட்டது, வடகிழக்கு மாநிலங்களில் வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இவ்வாறு மணிப்பூர் மற்றும் வடக்கிழக்கு மாநிலங்கள் குறித்து பிரதமர் மோடி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.