தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் தமிழ்நாட்டிற்கு முக்கிய பங்கு-பிரதமர் மோடி

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானதாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.  திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியல் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர்…

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானதாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். 

திண்டுக்கல் அருகே காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியல் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒற்றுமையான, சுதந்திரமான இந்தியாவை உருவாக்கத்தான் மகாத்மா காந்தி பாடுபட்டதாக தெரிவித்தார். செய்து முடிக்க முடியும் என்று நம்பிக்கையோடு கூறும் இளைஞர்கள் கையில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளதாக கூறிய அவர், பெண்களின் வளர்ச்சித்தான் தேசத்தின் வளர்ச்சி என்றார்.

கிராமங்களை சுயசார்புடையதாக ஆக்குவதற்கு காதியை முக்கிய காரணியாக காந்தி பார்த்ததாக கூறிய பிரதமர் மோடி, கிராமங்கள் சுயசார்புடையதாக இருப்பதன் மூலம்தான் நாடு சுயசார்பு உடையதாக மாறும் என்பது காந்தியின் சிந்தனை எனக் தெரிவித்தார். அந்த சிந்தனையின் அடிப்படையிலேயே சுயசார்பு இந்தியாவை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். சுதந்திர போராட்டக் காலத்தில் சுதேசி இயக்கம் தமிழ்நாட்டிலிருந்து தோன்றியதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி,  தற்சார்புடைய இந்தியாவை உருவாக்குவதில் தமிழகம் முக்கிய பங்குவகிப்பதாகவும் கூறினார்.

சண்டை, சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் தொடங்கி,  புவி வெப்பமடைதல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது வரை தற்காலத்தின் பல்வேறு சவால்களுக்கு தீர்வாக காந்திய சிந்தனை விளங்குவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். கிராமங்களின் ஆன்மா, நகரத்தின் வளர்ச்சி என்கிற கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக தமிழில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தின் மதிப்பு அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் மோடி, கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்த ஏற்றத்தாழ்வை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.  கிராமங்களில் சூரிய சக்தி பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, இதன் மூலம் எரிசக்தி துறையில் இந்தியா தற்சார்பு உடையதாக மாறும் என கூறினார். இயற்கை விவசாயம் நாட்டில் அதிகரித்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.