விவசாய போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு பிரதமர் மோடி இழப்பீடு எதுவும் வழங்கவில்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் பிப். 20ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் ஹோஷியார்பூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு பிரதமர் எந்த இழப்பீடும் வழங்கவில்லை என்று பேசினார்.
கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர், பஞ்சாப் மாநில விவசாயிகளின் ஓராண்டு கால உழைப்பை முதலாளிகளுக்கு தாரம் வார்க்க பிரதமர் மோடி முயல்கிறார். விவசாய போராட்டத்தில் இறந்தவர்களுக்கு இரண்டு நிமிட நேரம் கூட நாடாளுமன்ற வளாகத்தில் ஒதுக்கவில்லை. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர்நீத்த விவசாயிகளுக்கு இழப்பீட்டையும் அவர் வழங்கவில்லை. மாறாக உயிரிழந்த விவசாயிகளுக்கு பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுதான் இழப்பீடு வழங்கியுள்ளது” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு விவசாயிகளின் வங்கிக்கணக்கிலும் ரூ. 15 லட்சம் வைப்புத் தொகை செலுத்துவதாகவும், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் தன்னுடைய ஒவ்வொரு பேச்சின் போதும் பிரதமர் பேசி வருகிறார். இவற்றை யாரேனும் பெற்றுள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், “ஊழல், லஞ்சம் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த ஏன் பிரதமர் பேசுவதில்லை, ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பின்மையை கொண்டுவந்தாரே அது யாருக்கு பயன்” என்றும் கேள்வி எழுப்பினார் .
நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகப்படியான வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.








