மருத்துவ இடங்களைத் தேர்வு செய்த மாணவர்கள் வரும் 18-ம் தேதி வரை மருத்துவக் கல்லூரிகளில் சேரலாம் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவ கல்வி இயக்குநர் நராயணபாபு செய்தியாளர்களை சந்தித்தார். அதில், தேசிய மருத்துவ ஆணைய அறிவுறுதலின் படி இன்று முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்பட்டு உள்ளது என்றார். முதல் சுற்றில் மருத்துவ இடங்களைத் தேர்வு செய்துள்ள மாணவர்கள் 18ம் தேதிவரை வகுப்புகளில் சேர்ந்துகொள்ளக் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் முதலில் அறிமுக வகுப்புகள் மட்டுமே தற்போது நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பெரும்பாலான பெற்றோர் மாணவர்களிடம் பெறப்பட்ட கோரிக்கை படி கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு மார்ச் 1ம் தேதி துவங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “7.5% உள் ஒதுக்கீட்டின் படி இதுவரை 541 மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். மேலும் 3 பேர் இன்னும் சேரவில்லை இது குறித்து விசாரிக்கப்படும். மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குறித்துக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் காவல்துறை உதவியுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவரின் படிப்பு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 541 மாணவர்கள் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் மாணவர்கள் தனிப்பட்ட முறையில் அணுகும் பட்சத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு ஒருவாரம் வரை அவகாசம் பெற்றுத் தரப்படும், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் வந்தால் அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.








