சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு ஏசி மின்சார ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவுப் பாதையில் ஏசி மின்சார ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே ஏசி பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் கட்ட ஆய்வு பணிகளை கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கியது. தற்போது, இந்த ஆய்வுகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக தலா 12 பெட்டிகள் கொண்ட 2 மின்சார ரயில்களை தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் ஒதுக்கியது. இந்த நிலையில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏசி மின்சார ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
“சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் சோதனை அடிப்படையில் ஏசி மின்சார ரயில் இயக்கப்படும். பின்னர் பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து, படிப்படியாக இந்த ஏசி மின்சார ரயில்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏசி மின்சார ரயில்களை பராமரிக்க தாம்பரம் அல்லது ஆவடியில் பிரத்யேக உள்கட்டமைப்பு உருவாக்க முயற்சி எடுக்கப்படும்.”
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.







