MI17V5 ரக ஹெலிகாப்டர் சந்தித்த விபத்துகள் குறித்தும், விபத்தில் சிக்கி உயிர் நீத்த பிபின் ராவத் இதற்கு முன் விபத்தில் இருந்து தப்பிய நிகழ்வு குறித்து பார்ப்போம்.
இந்தியாவின் முதல் முப்படை முதல் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது.
பிபின் ராவத் கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி நடந்த ஒரு விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். நாகாலாந்து மாநிலத்தில் நடந்த இந்த விபத்தில் சீட்டா ரக ஹெலிகாப்டர் திமாபூர் என்ற இடத்தில் மோதியது. அப்போது பிபின் ராவத் லெப்டினண்ட் ஜெனரலாக பணியாற்றினார்.
விபத்துக்குள்ளான MI17V5 ரக ஹெலிகாப்டர் உலகளவில் பன்முகத்தன்மையான பயன்பாடுகளைக் கொண்ட அதிநவீன ராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டர் ஆகும். கடந்த 2006 முதல் 2016 வரை 800 ஹெலிகாப்டர்கள் ரஷ்யாவிலிருந்து உலகம் முழுக்க ஏற்றுமதி ஆகியுள்ளது.
இந்திய விமானப் படை கடந்த 2008-ஆம் ஆண்டு 80 mi17v5 ஹெலிகாப்டர்கள் வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டது. இந்த ஹெலிகாப்டர்கள் 2011-ஆம் ஆண்டு தொடங்கி, 2018-ஆம் ஆண்டு முழுமையாக இந்தியா வந்தடைந்தது.
இதற்கு முன் இந்த வகை ஹெலிகாப்டர் சில விபத்துகளை சந்தித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் வழக்கமான ரோந்து பணியின் போது நடந்த விபத்தில் 6 விமானப்படை வீரர்கள் பலியாகினர். கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி அருணாசல பிரதேச மாநிலம் தவாங்க் அருகே பராமரிப்புக்காக இயக்கப்பட்ட போது நடந்த விபத்தில் 5 விமானப்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள் என மொத்தம் 7 பேர் பலியாகினர். கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணிகளில் 80 mi17v5 ஹெலிகாப்டர் ஈடுபட்டிருந்த போது, நடந்த விபத்தில் 20 பேர் பலியாகினர்.









