முப்படைகளின் முதன்மை தலைமை தளபதியின் பணிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த பதிவில்
சுதந்திர இந்தியாவில் சில சமயங்களில் முப்படைகளின், தலைமை தலைமைத் தளபதி பதவியை தனியாக உருவாக்க வேண்டும் என கோரிக்கைகள் வருவதுண்டு. 1999-ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லையில் ஊடுருவியதை அடுத்து, ஏற்பட்டகார்கில் போருக்குப் பிறகு, இந்திய அரசு நியமித்த உயர்நிலைக்குழு, முப்படைகளுக்கான ஒருங்கிணைப்பு தேவை என கருதியும், தேச பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையிலும், அரசுக்கும் முப்படைகளுக்கும் இடையே ஒரு பாலம் போல செயல்பட்டு ஆலோசனை வழங்க பாதுகாப்பு துறையில் முப்படைகளின் தலைமை தளபதி பதவியை, தனியாக உருவாக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, முப்படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கப்படும் என அடிக்கடி பேசி வந்தார். அதனடிப்படையில் நடைமுறையில் இருந்த, முப்படை தளபதிகள் குழுவுக்கு (Chief of Staff Committee) இந்தியப் பாதுகாப்புப் படைகளின் தலைவர்களாக உள்ளவர்களில் ஒருவர் தலைவராக இருப்பதற்கு பதிலாக, பாதுகாப்புப் படைத்தலைவர்களில் ஒருவரை, முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்படுபவார். அவரே முப்படை தளபதிகளின் குழுவுக்கும் தலைவராகவும் செயல்படுவார் என்று இந்திய அரசு முடிவு செய்தது, இந்த நியமனத்திற்கான அமைச்சரவைக் குழுவின் ஆலோசனையின் பேரில் இந்தியக் குடியரசுத் தலைவர், இரண்டாயிரத்து 19 ஆம் ஆண்டு, டிசம்பர் -31 அன்று, ஜெனரல் பிபின் ராவத்தை முதல், முப்படைகளின் தலைமை தளபதியாக நியமித்தார்.
முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு நியமிக்கப்படுபவர், நான்கு நட்சத்திரத் தகுதியுடன் பணியைத் தொடருவார். இந்திய குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்டாலும், நேரடியாக பாதுகாப்பு அமைச்சருடன் இணைந்து செயல்படுவார். அத்துடன் பாதுகாப்பு விவகாரங்கள் துறைக்கான தலைவராகவும் செயல்படுவார். பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் கொள்முதல் குழு மற்றும் பாதுகாப்பு திட்டமிடல் குழுவின் உறுப்பினராகவும் இருப்பார். முப்படைகளின் கூட்டு நடவடிக்கை, பயிற்சி உத்திகள், கேந்திர நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவது, முக்கிய ஒப்புதல்களை பெற்றுத்தருவது, ஒட்டு மொத்த ராணுவ செயல்பாடுகளுக்கும் ஒருங்கிணைப்பு பணியையும், இராணுவ ஆலோசகர் பணியையும் மேற்கொள்வார்.
இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தலுடன், மூன்று படைப்பிரிவுகளின் உள்கட்டமைப்பை பலப்படுத்துவது, தேவையான மேம்பாடுகளை செயல்படுத்துதல் போன்ற முக்கிய நடவடிக்கைகளை செயல்படுத்துவார். முப்படைகளின் தலைமை தளபதியுடன் , ஒரு கூடுதல் செயலாளர் மற்றும் ஐந்து இணை செயலாளர்கள் இருப்பார்கள். அரசாங்கத்தின் இராணுவ ஆலோசகர் தவிர, இராணுவ விவகாரத் துறைக்கும் தலைமை தாங்குவார். அத்துடன் அணுசக்தி கட்டளை ஆணையத்தின் இராணுவ ஆலோசகராக செயல்படுவார். மேலும், தேவையற்ற வீண் செலவினங்களைக் குறைத்து, ஆயுதப் படைகளின் போர் திறன்களை அதிகரித்தலை, நோக்கமாகக் கொண்டு செயல்பாட்டில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதும் முக்கிய பணியாகும்









