‘தவறான திசையிலிருந்து புகைப்படம் எடுத்ததே சர்ச்சைக்குக் காரணம்’ – சுனில் தியோர்

தவறான திசையிலிருந்து புகைப்படம் எடுத்ததே சர்ச்சைக்குக் காரணம் என வடிவமைப்பாளர் சுனில் தியோர் விளக்கமளித்துள்ளார் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் 6.5 மீட்டர் நீளமும், 9500 கிலோ எடையும் கொண்ட…

தவறான திசையிலிருந்து புகைப்படம் எடுத்ததே சர்ச்சைக்குக் காரணம் என வடிவமைப்பாளர் சுனில் தியோர் விளக்கமளித்துள்ளார்

தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் 6.5 மீட்டர் நீளமும், 9500 கிலோ எடையும் கொண்ட வெண்கலத்திலான தேசிய சின்னத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 11-ஆம் தேதி திறந்த வைத்தார். அப்போது தேசிய சின்னத்தைத் திறந்து வைத்தது தமக்குக் கிடைத்த பெருமை எனப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த தேசிய சின்னம் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்தியத் தேசிய சின்னமானது சாரநாத்தில் பேரரசர் அசோகர் எழுப்பிய அசோகத் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது திறக்கப்பட்ட சின்னத்தில் உள்ள சாரநாத் தூணில் உள்ளதைப்போன்று அல்லாமல் இது மாறுபட்டு இருப்பதாகவும், சிங்கங்களின் தோற்றம் வேறு வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அண்மைச் செய்தி: ‘பிரதமரைச் சந்திக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல்’

தேசிய சின்னத்தில் உள்ள சிங்கங்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறது, அழகாக இல்லை என்றும், நமது தேசிய சின்னத்தை அவமதித்து விட்டார்கள் என்றும் ஒரு தரப்பினர் விமர்சித்துள்ளனர். ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் இந்த சின்னம் குறித்து விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

ஆனால், சாரநாத் அசோகர் தூணில் அமைந்துள்ள சிங்கங்களையே இந்த தூணில் உள்ள சிங்கங்களும் பிரதிபலிப்பதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். தவறான திசையிலிருந்து புகைப்படம் எடுத்ததே சர்ச்சைக்குக் காரணம் என இதன் வடிவமைப்பாளர் சுனில் தியோர் விளக்கமளித்துள்ளார். மேலும் அசோகர் எழுப்பிய தூணின் வடிவத்திலே இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், தாங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் சுனில் தியோர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.