நெல்லை மாவட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள தலையணை பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையணை பகுதியில் குளிக்கவும், அதன் அழகை பார்த்து ரசிக்கவும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை தலையணைக்கு மேலே உள்ள அடர்ந்த வனப்பகுதிகளான செங்கல்தேரி, கோழிகால் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் தலையணையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
தலையணையில் இறங்கி குளிக்க முடியாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குதொடர்ச்சி மலையிலும் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.







