1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளுக்கான மானியத் தொகை 50 சதவீதம் விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது முடக்கம் அமல்படுத்தப் பட்டன. தொற்று குறைந்து வரும் நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இப்போது திறக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், நவம்பர் 1ஆம் தேதி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
இதற்கான முன்னேற்பாடுகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவர்களுக்கு கிருமிநாசினி, வெப்பநிலை பரிசோதனைக் கருவி வாங்குதல், கழிப்பறைகள் மற்றும் வகுப்பறைகளை பராமரித்தல் உள்ளிட்ட முன் தயாரிப்புப் பணிகளுக்காக, பள்ளிகளுக்கான மானியத் தொகையில் 50 சதவீதம் விடுவிக்கப்பட்டுள்ளது.
அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான மானியத்தொகையான 77 கோடி ரூபாயில், 34 கோடி ரூபாயை பள்ளிக்கல்வித்துறை விடுவித்துள்ளது.







