100 நாட்களை கடந்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வில் மாற்றம் இல்லை.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பெட்ரோல் 86.48க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் ஜூன் மாதம் ரூ.96 ஐ தொட்டது. அங்கிருந்து அதிரடியாக உயர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 100-ஐ தாண்டியது. இதனால், சாமானிய மக்கள் பெரிதும் அவதியுற்றனர்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு பெட்ரோல் விலையில் இருந்து ரூ.3 குறைப்பதாக அறிவித்ததையடுத்து பெட்ரோல் விலை 100க்கும் கீழ் குறைந்தது. கடந்த தீபாவளி அன்று பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் பெட்ரோல் ரூ.101.40க்கும் டீசல் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது.
100 நாட்களை கடந்த நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் எனவும் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படும் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
பிப்ரவரி 1ம் தேதி நடைப்பெற்ற நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டிலும் பெட்ரோல் விலை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகது. மக்கள் அவதிப்பட்டு வருவதையும், பொருளாதாரம் சரிந்து வரும் நிலையையும் பொருட்படுத்திக் கொள்ளாதவாறு மத்திய அரசின் நடவடிக்கைகள் இருப்பதாக அரசியல் கட்சிகளில் உள்ள பலரும் தெரிவித்து வருகின்றனர்.







