தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜகவினரின் வீடுகளில் தொடர்ந்து 2வது நாளாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் பாஜகவினரின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. நேற்று கோவை பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெருவில் வசித்து வருபவர் ஆர்எஸ்எஸ் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவர்
சீதாராமன். நேற்று நள்ளிரவு வீட்டின் வெளியே பலத்த சத்தம் கேட்டதை அடுத்து சீதாராமன் வெளியே வந்து பார்த்தபோது பெட்ரொல் குண்டு வீசப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








