அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
காங்கிரஸ் கட்சியில் மாற்றங்கள் தேவை என்று மூத்த தலைவர்கள் சிலர் கட்சியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்தும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, மதுசூதனன் மிஸ்திரி தலைமையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெற இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (செப்டம்பர் 24) தொடங்கி இந்தமாதம் 30-ம் தேதி வரை நடைபெறும் என அந்த குழு அறிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்குகளின் எண்ணிக்கை அக்.19-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் யார் தலைவர் பொறுப்பு ஏற்க போகிறார் என்பது மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. சோனியா காந்திக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரால் கட்சியை பார்த்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தனக்கு தலைவர் பதவி வேண்டாம் என கட்சி பணியாற்றுவேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இதனால், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளார். மேலும் திருவனந்தபுரம் எம்பி சச தரூரும் தலைவர் பதிவிக்கு போட்டியிட உள்ளார். 71 வயது நிரம்பிய மூத்த தலைவரான அசோக் கெலாட், சோனியாகாந்தியின் ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.
நேரு குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுள் அசோக் கெலாட்டும் ஒருவர். இவர் பாரம்பரிய காங்கிரஸ் உறுப்பினர். அதேநேரத்தில் சச தரூரும் கட்யின் மூத்த தலைவர்களில் ஒருவர் எனவே, இருவரில் யாருக்கு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மனிஷ் திவாரி, கமல் நாத் போன்றவர்களும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-இரா.நம்பிராஜன்