லியோ படம் தடைகோரிய மனு தள்ளுபடி!

லியோ படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ராஜமுருகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,“தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்த இப்படம் கடந்த 2024 அக்டோபர் 19-ம் தேதி வெளியானது.

இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் உள்ளதோடு, துப்பாக்கி, கத்தி, இரும்பு கம்பிகளும், வீட்டிலேயே துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை தயாரிப்பது பற்றியும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மத சின்னங்களை பயன்படுத்தி மதம் தொடர்பான முரண்பாடான கருத்துக்களையும், எதிரிகளை பழிவாங்க பெண்கள், குழந்தைகளை கொல்ல
வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்துதல், மனிதர்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட வன்முறை மற்றும் பார்க்கத்தகாத காட்சிகளை படமாக லோகேஷ் கனகராஜ் உருவாக்கி உள்ளார்.

கலவரம், சட்ட விரோத செயல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் செய்தல், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், மக்களைக் கொல்வதை தற்காப்புச் செயலாகக் கூறுவது, பொது அதிகாரத்தை அச்சுறுத்துவது, போலீஸ் பாதுகாப்புக்காக நீதித்துறை அதிகாரிகளிடம் பொய் சொல்வது, கார், இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, காவல்துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் போன்ற காட்சிகள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காண்பிக்கிறது.

Vijay's Leo & Lokesh Kanagaraj’s History Of Violence

இதன்மூலம் இளம்சிறார்கள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதுபோன்ற படங்களை தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். எனவே லியோ திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் லியோ திரைப்படக்குழு மீது வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து திரைப்படமாக்கியதற்கு இந்திய குற்றவியல் தண்டனை சட்டங்களின் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் லியோ படத்தை முற்றிலும் தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. லியோ பட குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், “இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. விளம்பர நோக்கோடு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.