“முதலமைச்சர் வழியில், வெற்றி நடைபோட…” – மகளுக்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து!

மகள் திவ்யா மகி திமுகவில் இணைந்ததற்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், அவ்வப்போது தனது சமூக வலதள பக்கங்களில் அரசியல் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து வருவார். அந்த வகையில் அண்மையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம், மணிப்பூர் விவகாரம், குஜராத் கலவரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் அரசியல் பேசி வந்த திவ்யா சத்யராஜ்  கடந்த ஜன.19ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் மகள் திமுகவில் இணைந்ததற்கு சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  “என் அன்பு மகள் திவ்யா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டதற்கு என்னுடைய மகிழ்ச்சிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, மானமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழியில், சமூகநீதி கோட்பாட்டில் சமரசமின்றி வெற்றி நடைபோட மனமார வாழ்த்துகிறேன்” என பேசியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.