மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்ததாவது:
”மதுரை மாவட்டம் பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிர்புறத்தில் ஆக.20ல் அதிமுக சார்பில் மாநாடு நடக்கிறது. மாநாடு நடக்கவுள்ள இடம் மதுரை விமான நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. தினசரி அதிகளவில் விமானங்கள் வந்து செல்கின்றன. தரையிரங்கும் போது மிகவும் தாழ்வான பகுதியில் தான் விமானங்கள் பறக்கும் விமான நிலையத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே உள்ளன.
மத்திய தொழில்படை பாதுகாப்பு மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. சுமார் 15 லட்சம் பேர் மாநாட்டிற்கு வருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். அன்றைய தினம் விமானங்கள் தரையிரங்குவதில் இடையூறு ஏற்படக்கூடும். மாநாட்டில் பங்கேற்போர் பட்டாசுகள் வெடிக்கும் போது வானில் உயரத்திற்கு பறந்து வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக விமான போக்குவரத்து துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றி 20 கி.மீ. தொலைவிற்கு உரிய அனுமதியின்றி குறிப்பிட்ட அளவு உயரத்திற்கு மேல் விளம்பர பலகைகள் கூட வைக்க முடியாது.
மாநாட்டிற்கு அனுமதி கோரும் முன் மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. மாநாட்டிற்கு வருவோரால் பெருமளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும். எனவே ஆகஸ்ட் 20ம் தேதி அன்று மதுரை பெருங்குடியில் அதிமுக மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும். மாநாடு நடத்த அனுமதிக்ககூடாது என உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.







