தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேவையான அரசின் பிற துறைகளின் அனுமதியை நானே பெற்றுத் தருவேன் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் 7வது தென்னிந்திய பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் பற்றிய கண்காட்சியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்துவைத்தார். ‘OSH INDIA South’ சார்பில் இரண்டு நாட்கள் சென்னை வர்த்தக மையத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பாதுகாப்பு தொடர்பான பொருட்கள் (Safety Belt, Safety shoe, Safety mask) போன்ற பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விழா மேடையில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், தொழில்நுட்பங்களின் Hub-ஆக சென்னை மாறிக்கொண்டு வருகிறது. விமானம், ரயில், கப்பல், சாலை போக்குவரத்து என்று அனைத்து வசதிகளும் நிறைந்த இடம் சென்னைதான். தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து வசதிகள் சிறப்பாகவே உள்ளன. தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளது. இன்னும் அதிக நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குத் தேவையான அரசின் பிற துறைகளின் அனுமதியை நானே பெற்றுத் தருவேன். IT துறை மூலம் 10% வருமானம் வருகிறது. அதை மேலும் அதிகரிக்க நடவடிக்கைகள், முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், Informa markets நிறுவனம் தொழில் பாதுகாப்பு உபகரணங்களில் எவ்வாறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது. தமிழ்நாட்டை டெக்னாலஜி ஹப்பாக மாற்றுவதே அரசின் நோக்கமாக உள்ளது. இந்த கண்காட்சி இளைஞர்களை ஊக்குவிக்க உதவும். நிறுவனங்கள் இதுபோன்ற கண்காட்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா







