திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலன்…வெறிச்செயலில் ஈடுபட்ட காதலி!

தேனி மாவட்டம் பெரியகுளம், மேல்மங்கலம் அருகே வைகை புதூர் சாலை அமைந்துள்ளது. இவ்வழியே நடந்து சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் சாலையின் ஓரமாக உள்ள தரிசு நிலத்தில் எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று…

தேனி மாவட்டம் பெரியகுளம், மேல்மங்கலம் அருகே வைகை புதூர் சாலை அமைந்துள்ளது. இவ்வழியே நடந்து சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் சாலையின் ஓரமாக உள்ள தரிசு நிலத்தில் எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். யார் அந்த நபர்? அவரை எரித்துக் கொலை செய்ததுதான் யார்? காவல்துறையினர் நடத்திய விசாரணையில்தான் அதிர்ச்சியடைய வைக்கும் உண்மைகள் தெரிய வந்தன.

தேனி மாவட்ட வடுகபட்டியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரும் அதே ஊரில் வசித்து வரும் உறவினர் மகளான விஜயசாந்தியும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே ஆனந்தராஜுக்கு அவரது பெற்றோர் ஏற்பாட்டின்படி வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயசாந்தி வடுகப்பட்டி பகுதிக்கு ஆனந்தராஜை வரவழைத்து அவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் ஆனந்தராஜ் மறுத்த நிலையில் தனது சகோதரரான பிரபாகரன் என்பவருடன் சேர்ந்து ஆனந்தராஜின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். தொடர்ந்து ஆனந்தராஜின் சடலத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் வசிக்கும் உறவினரான ஆசைப்பாண்டி என்பவரது வீட்டில் விஜயசாந்தியும் பிரபாகரனும் தங்கி உள்ளனர். இதையடுத்து காவல்துறையினரின் தொடர் தேடுதல் வேட்டையில் விஜயசாந்தியும் பிரபாகரனும் சிக்கினர். அவர்கள் கொடுத்த தகவல்படி இருவருக்கும் அடைக்கலம் கொடுத்த ஆசைப்பாண்டி மற்றும் கொலை திட்டம் வகுத்துக் கொடுத்த விஜயசாந்தியின் சகோதரி வித்யா ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

நான்கு பேரையும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலனை உறவினர்களுடன் சேர்ந்து இளம்பெண் கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply