பேரறிவாளன். அவரது 31 ஆண்டுகால சிறைவாசம்… முடிவுக்கு வருமா? வராதா? என்ற கேள்வி ஒருபுறம். தாய் அற்புதம்மாளின் பல வருட கண்ணீர் துடைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். இந்தியாவே இந்த ஒற்றை தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தது. 2022 மே 18ம் தேதி காலை 10 மணியளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. தீர்ப்பு வெளியானதும், பேரறிவாளன், அற்புதம்மாள் உள்ளிட்டோரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆனால், இம்முறை அது ஆனந்தக் கண்ணீராக பெருகியோடியது. சந்தோஷக் கண்ணீராய் வழிந்தோடியாது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. கம்பிகளையும், கட்டாந்தரையையும் மட்டுமே தழுவிய பேரறிவாளனின் கைகள் தாயையும், சகோதரிகளையும் கட்டித் தழுவின. அந்த ஆனந்த தருணத்தை நேரலையில் பதிவு செய்தது நியூஸ் 7 தமிழ்.
மகனை ஆரத்தழுவ இனி எவரின் அனுமதியும் தேவையில்லை, யாரும் தடுக்க முடியாது என்ற நிம்மதியில் கண்ணீர் வடித்தார் அற்புதம்மாள். அந்த கண்ணீரை கைகளால் துடைத்துக்கொள்ளும் போதே ’என் மகன் எனக்கு கிடைத்துவிட்டான்’ என்ற நிம்மதியும் வெளிப்பட்டது. தள்ளாத வயதில் வீட்டிற்கும், சிறைக்கும், நீதிமன்றத்திற்கும் நடையாய் நடந்த அற்புதம்மாளின் கால்கள், இனி ஓய்வெடுக்கும் என்ற நிம்மதியே பலருக்கும். பேரறிவாளனது வீடே விழாக் கோலம் பூண்டது. இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ” எனக்கு விடுதலை கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. இது நாம் அனைவருக்கும் கிடைத்த வெற்றி” என்று தனது சந்தோஷத்தை முதன் முதலில் நியூஸ் 7 தமிழுக்கு பதிவு செய்கிறார் பேரறிவாளன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இந்த தீர்ப்பு முன்பே கிடைத்திருக்க வேண்டியது. தாமதம் என்றாலும் பேரறிவாளன் விடுதலையானது மகிழ்ச்சி அளிக்கிறது என நா தழுதழுத்தார் அற்புதம்மாள். பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு மே 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் ஆளுநருக்கான சிறப்பு அதிகாரம் 161ஐ பயன்படுத்துவது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ‘‘தமிழ்நாடு அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கும் முடிவை மத்திய அரசிடம் பகிர்ந்துகொண்டது. அதற்குப் பின்னர்தான் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறி தலையிட்டது. இதிலிருந்துதான் குழப்பங்கள் தொடங்கியது’’ என தெரிவித்தார்.
மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நடராஜ், ‘‘அரசியலமைப்புச் சட்டத்தின் 302 பிரிவின்கீழ் தண்டனை பெற்றவர்களை மாநில அரசு விடுதலை செய்ய அதிகாரம் இல்லை” என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘கடந்த 75 ஆண்டுகளில் இத்தகைய நடவடிக்கைகளில் ஆளுநர்கள் வழங்கியுள்ள மன்னிப்பு அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணானதா?’’ என கேள்வி எழுப்பியதோடு, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்றனர். தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ”ஒரு நபரை விடுவிக்கவும் அல்லது விடுவிக்க மறுக்கவோ தனிப்பட்ட முறையில் ஆளுநர் முடிவெடுக்க முடியாது. மாநில அமைச்சரவையின் முடிவிற்கு அவர் முழுமையாக கட்டுப்பட்டவர்’’ என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவருக்கு, ஆளுநர் அனுப்பி வைத்த போது என்னென்ன சட்டப்பிரிவுகளின் கீழ் அதிகாரம் இருக்கிறது என்ற விவரங்களை ஏன் குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார்? என்ற கேள்வியை எழுப்பினர். ”ஆளுநரே இந்த விவகரத்தில் கையெழுத்திட்டு முடித்திருக்க வேண்டும். ஆனால், அதைவிடுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பி, குடியரசு தலைவரையும் இந்த வழக்கினுள் இழுத்து விட்டுள்ளதாக” தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ”பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவை ஏற்றுக் கொள்ளாததன் மூலம், மிகப்பெரிய அரசியல் சாசன பிழையை தமிழ்நாடு ஆளுநர் செய்துவிட்டதாகவும்” வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கின் மற்ற வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர். இதனிடையே, பேரறிவாளன் வழக்கு தொடர்பாக, மத்திய அரசு சார்பிலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசு சார்பில் கூறப்பட்டதாவது, “இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302ன் கீழ் தண்டனை பெற்றாலும் வழக்கை விசாரித்தது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு தான். அவ்வாறு இருக்கும்போது இதில் மாநில அரசு முடிவெடுக்க முடியாது. எனவே, தற்போது இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் மட்டுமே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது. எனவே, தன்னை விடுதலை செய்யக் கோரிய பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றது மத்திய அரசின் வாதம். தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டதாவது, ”சட்டப்பிரிவு 302ன் கீழ் தண்டனை பெற்றவர்களின் விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் என்ற மத்திய அரசு தரப்பு வாதத்தை ஏற்றால், இத்தனை ஆண்டுகளாக ஆளுநர் சட்டப்பிரிவு 161ன் கீழ் அளித்த மன்னிப்பு, தண்டனை குறைப்பு ஆகியவை அரசியல் சாசனத்துக்கு முரணானதாக ஆகிவிடும். எனவே உச்சநீதிமன்றம் தனக்கான தனிப்பட்ட அதிகாரமான 142ஐ பயன்படுத்தி முன்னர் பல வழக்குகளில் முடிவெடுத்ததுபோல, பேரறிவாளன் வழக்கிலும் முடுவெடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டும்” என தமிழ்நாடு அரசு தனது தரப்பு வாதத்தை தாக்கல் செய்தது.
இரு தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக அனைவரும் காத்திருந்தனர். தீர்ப்பளிக்க உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் இன்று காலை வருகை புரிந்த நிலையில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. ”அரசியலமைப்புச் சட்டத்தின் 161ன் படி தமிழக அமைச்சரவை ஒரு முடிவெடுத்தது என்றால், அந்த முடிவு மாநிலத்தின் ஆளுநருக்கு கட்டுப்பட்டதுதான். அமைச்சரவையின் முடிவு தனக்கு கட்டுப்படாதது என்று ஆளுநர் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் மீது, கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கால தாமதமும், தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமலும் இருந்தது சட்ட விரோதமானது. அளுநர் முடிவெடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதை ஏற்க முடியாது.” என்று, அரசியலமைப்புச் சட்டத்தின் 142ன் படி பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரசியல் சாசனத்தின் 4வது அத்தியாயம் மத்திய நீதித்துறை தொடர்பாக கூறுகிறது. இதில், தான் சட்டப்பிரிவு 142 வருகிறது. இந்த பிரிவின்படி, மாநில அல்லது மத்திய அரசோ, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடக்கவில்லை அல்லது அதன் உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால், நீதிமன்றமே நேரடியாக அந்த உத்தரவை நிறைவேற்ற முடியும். இதன்படியே, பேரறிவாளனின் விடுதலை சாத்தியமானது.
”பேரறிவாளன் சிறையில் கல்விக்காக நிறைய நேரம் செலவிட்டுள்ளார். அதிகாரிகளுடன் நன்னடத்தையாக இருந்துள்ளார். இதையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான் இந்த தீர்ப்பு வந்துள்ளது” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார் பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு.
”அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்” என்கிறது திருக்குறள்.
கெட்டவர் மகிழ்ச்சியாய் வாழ்வதும், நல்லவர் வீழ்ந்துபோவதும், இயற்கைக்கு எதிர்மறையானது. செவ்வியான் கேடு என்பது போலவே எனது சிறைவாசம். எனது விடுதலைக்காக போராடிய என் தாய்க்கும், அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி எனக்கூறி, பறை இசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன்.
”31 ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்த ஒரு மனிதனின் வேதனையை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்.” என்று தழுதழுத்த குரலில் ஊடங்களிடம் பேட்டியளித்தார் அந்த அற்புதத்தாய். தான் இத்தனை நாள் பட்ட வேதனையும், தனது மகன் கிடைத்த சந்தோஷமும், ஒருசேர அந்த குரலில் ஒலிக்கிறது. தன் மகன் பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்படும் போதெல்லாம்…. ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிப்பதே அற்புதம்மாளின் வேலையாக இருக்கும். அது பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் முதல் முறையாக பிணை வழங்கிய நாள் வரை நீண்டது. ஆனால், இப்போது கூடுதல் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் அற்புதம்மாள். அதற்கு காரணம். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பாக இறுதி விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் உச்சநீதிமன்றம், பேரறிவாளனை வழக்கில் இருந்தே விடுதலை செய்திருப்பதுதான்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு, பேரறிவாளனின் விடுதலையை விரும்புகிற யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஏனெனில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு வரலாற்றிலேயே, எழுவர் விடுதலை தொடர்பாக கடந்த காலங்களில் நடைபெற்ற அத்தனை விசாரணையிலும், பேரறிவாளன் உள்ளிட்ட எவருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது கிடையாது. ஆனால், இதற்கான பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினரின் போராட்டம் என்பது சாதாரணமானதல்ல. 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி விசாரணைக்காக பேரறிவாளன் கைது செய்யப்பட்டது தொடங்கி, இன்று வரையில் அவரை சுற்றிச்சுழலும் அரசியலும் கொஞ்சநஞ்சமல்ல. சொல்வதென்றால், பேரறிவாளன் விடுதலை 2013ம் ஆண்டே நிகழ்ந்திருக்க வேண்டும். அதற்கு காரணம், ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் பணியாற்றிய சி.பி.ஐ எஸ்.பி தியாகராஜன் கூறியதுதான். ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற பேரறிவாளன், ஆரம்ப கட்ட விசாரணையின் போது கொடுத்த வாக்குமூலத்தின் சில பகுதிகளை, தாம் வேண்டுமென்றே பதிவு செய்யாமல் விட்டு விட்டதாகவும், முழுமையாக பதிவு செய்திருந்தால் வழக்கின் போக்கே மாறி இருக்கும் என்றும் தியாகராஜன் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக, “உயிர்வலி’ என்ற ஆவணப்படத்திலும், ஊடகங்களுக்கும் பேட்டியளித்த தியாகராஜன், பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தில் “சிவராசனுக்கு பேட்டரி வாங்கித் தந்ததாகவும், ஆனால், அந்த பேட்டரிகளை எதற்காக வாங்கி வரச் சொன்னார் என்று தனக்குத் தெரியாது” என்று தெரிவித்ததாக கூறினார். பேரறிவாளனின் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்தால், அது பேரறிவாளின் விடுதலை வாக்குமூலமாக அமைந்துவிடும் என்பதால் “எதற்காக வாங்கி வரச் சொன்னார் என்று தெரியாது” என்ற வாசகத்தை நீக்கிவிட்டதாக அந்த பேட்டியில் தியாகராஜன் கூறியிருந்தது வழக்கில் வேறொரு கோணத்தை புலப்படுத்தியது.
இந்த நிலையில் தான், பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மாநில அரசு விரும்பினால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கு உட்பட்டு, விடுதலை செய்யலாம் என்று கூறியது. அதன்படி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்தது. இந்த செய்தியை அறிந்த பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஆனால், ஜெயலலிதா கூறியது போன்று பேரறிவாளன் உள்ளிட்ட எவரும் விடுதலையாகி வீடு திரும்பவில்லை. காரணம், தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால், பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தாமதம் ஆனது. இந்த நிலையில் தான், சி.பி.ஐ. விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. அதேசமயம், 161வது பிரிவின்கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கூறியது. இதை வழிமொழியும் வகையில், 7 பேரையும் விடுவிப்பது குறித்து, அரசியல் சாசனத்தில் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்சநீதிமன்ற மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.
அரசியலமைப்பு பிரிவு 161ன் கீழ் தமிழக அரசு முடிவெடுத்தால் விடுதலையில் சிக்கல் இருக்காது என்று சட்ட வல்லுநர்களும் கருத்து தெரிவித்தனர். ஆனால், உடல்நலக் குறைவால் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்ததால், பெரும் கேள்வி எழுந்தது. 1991 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு, சுமார் 26 ஆண்டுகள் கழித்தும், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஒருமாத பரோல் விடுப்பு கிடைத்தது. முதல் முறை பரோல் முடிந்து சிறைக்கு செல்ல இருந்த நிலையில், மேலும் முப்பது நாட்கள் பரோலை நீட்டித்து உத்தரவிட்டது. இந்த சூழலில் தான், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எழுவர் விடுதலை தொடர்பாக 2018ம் ஆண்டு துணிச்சலான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். அரசியல் சாசனம் பிரிவு 161ன் கீழ் எழுவர் விடுதலைக்குப் பரிந்துரைத்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தார்.
இதன் காரணமாக, 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, எழுவரும் விடுதலை பெற்று விடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்மானம் நிறைவேற்றி 3 ஆண்டுகள் கடந்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதனை பரிசீலிக்கவில்லை. உச்சநீதிமன்றத்திலும் பேரறிவாளன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எழுவர் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 2020 நவம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆளுநர் தாமதம் செய்துவருவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 900 நாட்கள் கழிந்த நிலையில், அது குறித்து தம்மால் முடிவெடுக்க முடியவில்லை என்று கூறி, 7 தமிழர் விடுதலை குறித்த கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டதாக ஆளுநர் மாளிகை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அடுத்தடுத்த அமர்வுகளிலும், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க தமக்கு அதிகாரம் இல்லை என்றே ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு அண்மையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதே, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசின் தீர்மானம் மீது, ஆளுநர் முடிவெடுக்க முடியாது என தெரிவித்தார். ஏற்கனவே, பேரறிவாளனுக்கு மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைத்து சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு சலுகை வழங்குவதை எப்படி ஏற்க முடியும்? எனவும் வாதிட்டார். அத்துடன், 72-வது அரசியலமைப்பு பிரிவின்படி, குடியரசு தலைவர் தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தியே முடிவெடுக்க முடியுமே தவிர, இந்த விவகாரத்தில் மாநில ஆளுநர் முடிவெடுக்க முடியாது எனவும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஒருவருக்கு, ஏன் பிணை வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேளிவி எழுப்பியது. மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தாலும், மனுதாரர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்குகிறோம் என தெரிவித்த நீதிபதிகள், மகாத்மா காந்தி படுகொலை வழக்கை உதாரணம் காட்டியே, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி அதிரடி காட்டினர்.
2011-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகன் அகிய மூவருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு தேதி குறிக்கப்பட்ட நிலையில், தமிழகமே கொந்தளித்தது. அத்தருணத்தில் மூவர் தூக்குக்கு தடை கேட்டு ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தூக்கு தண்டனைக்கும் மேலான தண்டனையை அவர்கள் அனுபவித்து விட்டார்கள். ஒரு குற்றத்திற்கு ஒரு தண்டனை தான். எனவே மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று, முன்னாள் சட்ட அமைச்சரும் வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கோலின் கோன்சால்வ்ஸ் போன்றோர் எடுத்து வைத்த வாதத்தால், தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. இந்தத் தடைக்குப் பிறகு தான், உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சதாசிவம் அமர்வு, மூவருக்கான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றித் தீர்ப்பளித்தது.
அப்போதுதான் 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்..
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியதில் இரண்டு காரணங்கள் பிரதானமாக கவனிக்கப்பட்டன. ஒன்று மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், தடா நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்தின் முன் விடுதலை. மற்றொன்று மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு. இதன் பிறகே நீதிபதிகள் ஜாமீன் வழங்கும் முடிவுக்கு வந்தனர். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ், சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தையும் கவனிக்க வேண்டும்.
அதில், “இவ்வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தீவிரக் குறைபாடு இருக்கிறது. அது இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் மீதான மன்னிக்கமுடியாத களங்கம், இந்த வழக்குக்கான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் ஒருவரான நான் இந்த கடிதத்தை எழுதுவதுதான் சரியாக இருக்கும். நீங்களும் ராகுல்காந்தியும் மனிதாபிமானத்தோடு இவர்களின் தண்டனைக் குறைப்புக்குக் கடிதம் எழுதுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு முன்பாகவே, மறைந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் மனித உரிமை ஆர்வலரான வி.ஆர்.கிருஷ்ணய்யர், பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்திருந்தார். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை செய்யக்கோரி 2019ம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தும் அற்புதம்மாள் மனு அளித்தார்.
2021ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எழுதிய கடிதத்தில் தமிழக அமைச்சரவை 2018-ல் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்று பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய, உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இதுதொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார். 32 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளனுக்கு பிணை விடுதலை வழங்கியிருப்பது நீண்ட நெடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. எனினும் அவர் முழுமையாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன். பேரறிவாளனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டுமென்ற ஆசையில், தாயார் அற்புதம்மாளின் உள்ளம் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நிரந்தர விடுதலை கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டார் பேரறிவாளன். மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும், எழுவர் விடுதலை விஷயத்தில் அவர்களின் செயல்பாடு ஒன்றுதான். விடுதலையை ஏற்க முடியாது என்பது.
இந்த நிலையில் தான், 2022 மே 4ம் தேதி இந்த வழக்கு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்கு முன்பான இரண்டு அமர்வுகளிலும் ஆளுநரின் அதிகாரம் குறித்து கேள்விகள் அதிகம் இடம்பெற்ற நிலையில், அமைச்சரவையின் முடிவை மீறி ஆளுநர் தனியாக செயல்பட அதிகாரம் இல்லையென நீதிபதிகள் தெரிவித்தனர். ஆளுநர் அமைச்சரவையின் முடிவை மீறுவது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது என்றும், பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்கிற அதிகார மோதலுக்கு இடையில், பேரறிவாளன் ஏன் சிக்கி தவிக்க வேண்டும்.? என்றும் கூறிய நீதிபதிகள், பேரறிவாளனை ஏன் நாங்களே விடுதலை செய்ய கூடாது என்கிற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.
மே 4ம் தேதி நடைபெற்ற விசாரணையும், பேரறிவாளனை விடுதலை செய்யும் முடிவுக்கு உச்சநீதிமன்றம் வந்துவிட்டதையே எடுத்துக்காட்டியது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவிக்க, குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்க தேவையில்லை என தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை கூறினால், உடனடியாக பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர். அரசு முடிவெடுக்கவில்லை என்றால், உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும் என்றும் எச்சரித்த நீதிபதிகள், கண்மூடிக்கொண்டு இருக்க முடியாது. அனைவரும் அரசியல் சாசனத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை அதிகரித்தது.
இதோ பேரறிவாளன் விடுவிக்கப்பட்டுவிட்டார். அவரது தாயாரின் போராட்டத்துக்கு நீதி கிடைத்துவிட்டது. எழுவரில் ஒருவர் விடுதலை ஆகியிருப்பதால் மீதமுள்ள 6 பேரின் நிலை என்ன என்பதுதான் எல்லோருக்குமான கேள்வி… அவர்களுக்காகவும் அரசு சட்டப்போராட்டம் நடத்தும் என்றிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அடுத்து என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
– பிரபாகரன்