“தமிழ்நாட்டின் சமூக அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா” – முதலமைச்சர் விஜய்!

சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப்பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

“கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.