நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500 வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ. 3,500 வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தற்பொழுது பெய்துவரும் மழையால் திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம் போன்ற பகுதிகளில் …

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ. 3,500 வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் தற்பொழுது பெய்துவரும் மழையால் திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம் போன்ற பகுதிகளில்  அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து மிகவும்  பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதங்களில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக வந்ததால் வழக்கமாக அணை திறப்பதற்கான தேதிக்கு முன்னரே தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால், விவசாயிகள் உடனடியாக உழவுப் பணிகளைத் தொடங்கினார்கள். அவை இப்பொழுது அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் கடும் மழையின் காரணமாகவும், ஆற்றில் அதிகமாக உபரிநீர் திறந்துவிடப்பட்டதாலும், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும், நெல்மணிகள் தரையில் சாய்ந்தும் முளைக்கத் தொடங்கியுள்ளது. இவை விவசாயிகளைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது .

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்கள் பயிர் காப்பீடு செய்திருந்தாலும், செய்யாவிட்டாலும், அவர்கள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். இழப்பீடு உடனே கிடைத்தால்தான் விவசாயிகள் மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல், மீண்டும் தாளடி பயிர் செய்ய ஏதுவாக இருக்கும். தற்பொழுது தமிழக அரசு 2022-2023 ஆண்டிற்கான நெல்லுக்கு ஆதார விலையை அறிவித்துள்ளது. பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,115ம், சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,160ம் அறிவித்துள்ளது. இந்தத் தொகை போதுமானதாக இல்லை.

நடப்பாண்டில் நெல் உற்பத்தியின் செலவு ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,986 என்று கணக்கிடப்பட்டுள்ளது. உற்பத்தி செலவைவிட லாபம் ரூ. 129 தான் அதிகம் என்றால் விவசாயிகளுக்கு எப்படி கட்டுப்படியாகும். அவர்களின் நிலை எவ்வாறு உயரும் . நாட்டில் மற்ற துறைகளை விட விவசாயத்திற்கு மட்டும் தான் இந்த நிலை இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். ஆகவே தமிழக அரசு நெல்லுக்கு அளிக்கும் ஊக்கத் தொகையை மேலும் அதிகரித்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500 வழங்கினால்தான் விவசாயிகளுக்கு ஓரளவிற்கு ஆதாயமாக இருக்கும். அதோடு இதுவரை நஷ்ட கணக்கையே பார்த்து வந்த விவசாயிகள் லாபக்கணக்கை துவங்க முடியும். விவசாயமும் வளர்ச்சியடையும் .

எனவே, மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.