சென்னையில் தினசரி 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தினசரி 13 முதல் 15 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருவதாக தெரிவித்தார்.
இதுவரை 8 ஆயிரத்து 500 காவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியும் எனவும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அதனை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.







