பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், கண்காணிக்கவும் தனி உளவுத்துறை அமைக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், அக்னி பத் திட்டத்தை இந்துக்களே அதிகளவில் எதிர்கின்றனர், பாஜக இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்பது அக்னி பத் திட்டச் செயல்படுத்துவதின் மூலமும், அதனால் ஏற்பட்டுள்ள வன்முறைகள் மூலம் தெரிகிறது எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜாதிய வன்கொடுமை மற்றும் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும் கண்காணிக்கவும் தனி உளவுத்துறை அமைக்க வேண்டும் எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – வானிலை ஆய்வு மையம்’
அதிமுக உட்கட்சி பூசலில் கருத்து தெரிவிக்க விடுதலை சிறுத்தை கட்சிக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த அவர், பாஜக தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக எந்தவித ஆதாரமும், முகாந்திரமும் இல்லாமல் தமிழக அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டி வருகிறார் எனக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
மேலும், காவல் நிலைய வதை கொலைகள் குறித்து விசாரிப்பதற்கும் தனி நீதிபதி கொண்ட ஆணையம் அமைக்க வேண்டும் எனவும், மோடி தங்கள் கட்சிக்குச் சரியான எதிர்க்கட்சி இல்லை என்று கூறுகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர் பேசுகிறார் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாஜகவுக்குச் சரியான எதிர்க்கட்சி மக்கள்தான் எனவும், விரைவில் மக்கள் சரியான பாடத்தை பாஜகவுக்குப் புகட்டுவார்கள் எனக் குறிப்பிட்டார்.





