பாலகிருஷ்ணா எட்டி உதைத்தால் கார் 30 அடி பறக்கும்; அதையே நான் செய்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – ரஜினிகாந்த் ஓப்பன் டாக்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா எட்டி உதைத்தால் கார் 30 அடி பறக்கும், அதையே நான் செய்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என வெளிப்படையாக…

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா எட்டி உதைத்தால் கார் 30 அடி பறக்கும், அதையே நான் செய்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் எனப் பெயர் வைக்கப் பட்டுள்ளது. நெல்சனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த அனிருத் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவ்விரு படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அனிருந் இந்த படத்தில் என்ன செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் , நடிகை ஆத்மிகா, தமன்னா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் சென்னை, மங்களூரு என்று 100 நாட்களை கடந்தும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில்,  மறைந்த ஆந்திர மாநில முதலமைச்சரும் தெலுங்கு திரையுலகின் உச்ச நடிகருமான என்.டி. ராமாராவின் 100வது பிறந்தநாள் விழா விஜயவாடாவில் கொண்டாடப்பட்டது.  இந்த விழாவில் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் பாலகிருஷ்ணா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் என்.டி.ஆர் குடும்பம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறப்பான வரவேற்பு அளித்துள்ளது.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இவ்வளவு பெரிய விழாவில் கலந்து கொண்டு தெலுங்கு பேசி நீண்ட நாடக்களாகி விட்டது. நான் ஏதாவது தவறாக பேசினால் மன்னித்துவிடுங்கள். எதை சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஞானம் சொல்கிறது. ஆனால் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று அவை சொல்கிறது.

எதைச் சொல்லக் கூடாது என்பதை அனுபவம் சொல்கிறது. உங்களையெல்லாம் இப்படிப் பார்த்தா எனக்கு அரசியல் பேசணும்னு தோணுது. ஆனால், வேண்டாம் ரஜினி என்று சொல்ல விடாமல் அனுபவம் தடுக்கிறது. நான் பார்த்த முதல் படம் என்டிஆர் நடித்த பாதாள பைரவி. அந்த படம் என் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது.

எனது முதல் படத்திலேயே இது பைரவி வீடுதானா என்ற டயலாக் வரும். நான் துணை நடிகராகவும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் ஒரு இயக்குனர் என்னை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதாக கூறினார். ஆனால், அப்போது எனக்கு கதாநாயகனாக நடிக்க எனக்கு விருப்பம் இல்லை.

கதையை ஒரு முறை கேளுங்கள் என்று அந்த இயக்குனர். மேலும் படத்தின் பெயர் பைரவி என்று கூறினார். அந்தப் பெயரை கேட்டதுமே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். லவகுசா படத்தின் வெற்றிக்காக என்.டி.ஆர் சென்னை வந்தபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்தேன். அப்போது எனக்கு 13 வயது.

ஸ்ரீ கிருஷ்ண பாண்டவியம் படத்தில் என்டிஆர் துரியோதனனாக நடித்து மெய்சிலிர்க்க வைத்தார். பேருந்து நடத்துனராக இருந்தபோது என்டிஆரை கற்பனை செய்து கொண்டு துரியோதனனாக என் நண்பர்களிடம் நடித்து காட்டுவேன். என் நடிப்பை பார்த்த நண்பர்கள் பாராட்டுவார்கள் சினமாவில் வாய்ப்பு தேடு நல்ல வில்லனாக வருவாய் என்று கூறினர்.

நடிகர் பாலகிருஷ்ணா கண்களாலே பார்த்து கொன்று விடுகிறார். அவர் காரை எட்டி உதைத்தால் 30 அடி தூரம் செல்லும். அதனால் நான், ஷாருக்கான், அமிதாப் பச்சன், சல்மான் கான் என யார் செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேநேரம் பாலகிருஷ்ணா செய்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

ஏனென்றால் பாலகிருஷ்ணாவை, என்டிஆராகவே மக்கள் பார்க்கின்றனர். அவருக்கு கோபம் அதிகம். ஆனால் இலகிய மனம் கொண்டவர். அவர் திரை உலகிலும், அரசியல் வாழ்விலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “எனது நெருங்கிய நண்பரும், அரசியல் தலைவருமான சந்திரபாபு நாயுடு இருக்கும் போது, அரசியல் பற்றி பேசாமல் இருப்பது சரியல்ல. எனக்கு அவரை 30 வருடங்களாக தெரியும். சந்திரபாபு நாயுடுவை எனது நண்பர் மோகன்பாபு அறிமுகப்படுத்தினார்.

 

அப்போது சந்திரபாபு விரைவில் பெரிய தலைவராக வருவார் என்றும் மோகன் பாபு என்னிடம் அடிக்கடி கூறுவார். 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. அவருக்கு இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியலும் தெரியும். பெரிய அரசியல் தலைவர்களுக்கு சந்திரபாபுவின் மகத்துவம் பற்றி தெரியும்.

ஐதராபாத்தை ஹைடெக் நகரமாக சந்திரபாபு உருவாக்கினார். ஐ.டி. என்றால் என்ன என்று கூட தெரியாத காலத்திலேயே அவர் ஐ.டி.யை ஐதராபாத்திற்கு கொண்டு வந்தார். தற்போது லட்சக்கணக்கானோர் ஐ.டி துறையில் பணியாற்றி வருகின்றனர். தொழிலதிபர்கள் பில் கேட்ஸ் உள்ளிட்டவர்கள் சந்திர பாபுவை பாராட்டினர்.

22 அண்டுகளுக்கு பிறகு நான் ஐதராபாத்தை சுற்றிப் பார்த்தேன். நான் ஐதராபாத்தில் இருக்கிறேனா அல்லது நியூயார்க்கில் இருக்கிறேனா என்று தோன்றியது. சந்திர பாபுவின் 2047 தொலைக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே ஆந்திரா முதன்மை மாநிலமாக மாறும். ஆந்திராவின் நிலை எங்கேயோ போய்விடும்” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

https://twitter.com/ysathishreddy/status/1651990975374577664?s=20

இதை தொடர்ந்து, தெலுங்கானா மாநில புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் ’Y சதீஷ் ரெட்டி’ தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை தலைப்பிட்டு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் இரவு நேரங்களில் ஹைதராபாத்தைச் சுற்றி வந்தேன், நான் இந்தியாவில் இருக்கிறேனா அல்லது நியூயார்க்கில் இருக்கிறேனா என்று எனக்குக் குழப்பமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சி தெரிகிறது’ – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ என்று அவர் விழாவில் கூறிய கருத்தை பதிவிட்டார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.