விழுப்புரம் அருகே பிரியாணிக்கு மக்கள் முந்தியடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பாலப்பாடியில் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 23 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்வில் பங்கேற்ற ஓபிஎஸ், ஒரு சிலருக்கு தையல் மெஷின், அயர்ன் பாக்ஸ் உள்ளிட்டவற்றை வழங்கிவிட்டு கிளம்பினார்.
நலத்திட்ட உதவிகளை பெறும் மக்களுக்காக 3 டன் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் முறையான முன்னேற்பாடு இல்லாததால் பொதுமக்கள் டேபிளில் உணவருந்தாமல், பிரியாணி ஏற்பாடாகி இருந்த இடத்திற்கே வந்து போட்டிப்போட்டுக்கொண்டு பிரியாணியை அள்ளிச் செல்ல முயன்றனர். வாழை இலையிலும், பாத்திரங்களிலும், கையில் கிடைத்த கவர்களில் எல்லாம் பிரியாணிகளை போட்டு எடுத்துச் சென்றனர். அதனை அருகிலுள்ள வயல் வெளியில் வைத்து சாப்பிட்டனர்.
இதேபோல நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த குடங்கள், புடவைகளையும் அள்ளி சென்றனர். ஒருவரே இரண்டு மூன்று குடங்கள் மற்றும் புடவைகளை அள்ளி சென்றதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திகைத்து நின்றனர். இதேபோல மூன்று மூன்று பேராக சேர்ந்து பெரிய பீரோவையும் வயல்வெளியில் தூக்கிச் சென்றனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.







