ஆம்னி காரில் துக்க நிகழ்ச்சிக்காக வந்த ஒரு சிறுமி, 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம், இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கிரைன் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், ஆட்டோ மெக்கானிக்கான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். 30வது நாள் காரியத்திற்காக உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். இரவு நேரத்தில் டீ குடிப்பதற்காக ஆம்னி காரில் 11 பேர் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்குச் சென்று டீ குடித்து விட்டு பின்னர் அங்கிருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, காரை ராஜேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். ஆத்தூர் புறவழிச்சாலை சேலம்- சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓட்டம்பாறை மேம்பாலம் பகுதியில் வலது புறத்தில் சென்ற போது ஈரோட்டிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து மீது ஆம்னி கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
ஆம்னி காரில் பயணம் செய்த ஆத்தூர் முல்லை வாடி பகுதியைச் சேர்ந்த சரண்யா [வயது 23] சுகன்யா [வயது 27 ] ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தியா [வயது 23 ] நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போக்கம்பாளைய பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகள் ரம்யா [ வயது 25] கார் ஓட்டினர் ராஜேஷ் ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் தன்ஷிகா [ வயது 11] பெரியண்ணன் [ வயது 38 ], புவனேஸ்வரி, கிருஷ்ணவேணி, உதயகுமார், சுதா, ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆத்தூர் போலீசார் காரில் இறந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், இதில் சேலம் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் தன்ஷிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் சரண்யா மற்றும் ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் கியோர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்வுக்காக வந்திருந்தவர்கள் இரவு கண் விழிப்பதற்காக டீ குடித்து விட்டு வீடு திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







