கொடைக்கானல் டம்டம் பாறை அருகே சுற்றுலா பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 சுற்றுலாப் பயணிகள் கர்நாடக பதிவெண் கொண்ட சுற்றுலா பேருந்தில் கொடைக்கானலுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு
சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் இன்று காலை சொந்த ஊர் நோக்கி திரும்பிய போது பேருந்து டம் டம் பாறை அருகே சென்று கொண்டிருந்த நிலையில், பேருந்தின் ஓட்டுனர் சாலை ஓரமாக பேருந்தை நிறுத்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, சரிவான பாதையில் பேருந்தை நிறுத்தியதாலும், பேருந்தின் ஹேண்ட் பிரேக்கை மட்டுமே உபயோகித்து பேருந்தை நிறுத்தி விட்டு சென்றதால், பள்ளத்தை நோக்கி பேருந்து நகரதொடங்கியது. இதனால் பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். ஆனால் நகர்ந்து சென்ற பேருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் இருந்த 40 பயணிகளும் விபத்தில் சிக்கினர்.
பேருந்தின் வாசல் பகுதி பள்ளத்திற்குள் சிக்கியதால் சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் தவித்துள்ளனர். பின்னர் அவ்வழியாக வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு அங்கிருக்கும் கம்பி வழியாக ஒரு சேலையைக் கட்டி உள்ளிருந்த 40 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரும் முன்பாகவே அனைவரும் மீட்கப்பட்டனர். பின்னர் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் 40 சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்









