பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலைப் புதைக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்

விக்கிரவாண்டி அருகே பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவரின் உடலைப் புதைக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆதிதிராவிட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டியை அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த 1 குடும்பத்தினரும், 500க்கும்…

விக்கிரவாண்டி அருகே பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவரின் உடலைப் புதைக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆதிதிராவிட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரவாண்டியை அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த 1 குடும்பத்தினரும், 500க்கும் மேற்பட்ட வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு நிலையான சுடுகாடு  இல்லாததால் இறந்தவரின் உடலை ஏரி, ஓடை, குளம் போன்ற பகுதிகளில் எறித்து மற்றும் புதைத்து  வந்துள்ளனர். இதனால், நிரந்தரமாக சுடுகாடு அமைக்க விக்கிரவாண்டி வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை மனு கொடுத்தும் நிலையாக சுடுகாடு அமைத்து தராமல் தற்காலிகமாக ஒருசில இடங்களை அந்த சூழலுக்கு ஏற்றவாறு மட்டுமே அமைத்துக் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 18.5.2022 அன்று இரவு கொட்டியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த சத்யநாராயணன் என்பவரின் 65 வயதான மனைவி அமுதா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். உடலை அடக்கம் செய்வதற்கு 19.5.2022 அன்று விழுப்புரம்  கோட்டாட்சியர் தலைமையில் ஓர் இடத்தை தேர்வு செய்து உடலை அடக்கம் செய்வதற்கான பணியை மேற்கொண்டனர். அப்போது மாற்று சமூகத்தினர் கோவில் அருகில் புதைக்க எதிர்ப்புத் தெரிவித்து தடுத்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட  ஆதிதிராவிட சமூக மக்கள் தங்களுக்கு நிலையான சுடுகாடு அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசிற்கும் கோரிக்கை விடுத்து இறந்தவரின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மீண்டும் போலீஸார், விக்கிரவாண்டி வட்டாட்சியர் நிலையான சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளதாகவும் கூறி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கையை அதிகாரிகளும், இறந்தவரின் உறவினர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.