100 ரூபாய் தாளில் வாழும் மக்கள்

மோடி அரசு 2016 ஆம் ஆண்டு செய்த மிக முக்கிய அதிரடி நடவடிக்கையாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை பார்க்கப்பட்டது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்காக மோடி எடுத்த முக்கிய நகர்வாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை…

மோடி அரசு 2016 ஆம் ஆண்டு செய்த மிக முக்கிய அதிரடி நடவடிக்கையாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை பார்க்கப்பட்டது. கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்காக மோடி எடுத்த முக்கிய நகர்வாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மக்களுக்கு மத்திய அரசு கூறியது. இதன் ஒரு பகுதியாக, 1,000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக 2,000 ரூபாய் நோட்டுகள் மக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் வெகுவாக குறைந்தது தெரியவந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின் படி, மார்ச் மாத இறுதியில் நாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளில் 1.6 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், இந்தியாவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, புழக்கத்தில் இருந்த ரூ. 2000 மதிப்புள்ள நோட்டுகள் 274 கோடியாக இருந்தன, இது புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கையில் 2.4 சதவீதமாகும். ஒரு வருடம் கழித்து இந்த எண்ணிக்கை 245 கோடி அல்லது புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 2 சதவீதமாக குறைந்தது. கடந்த நிதியாண்டின் இறுதியில் இது மிகக் குறைந்த அளவாகக் குறைந்துள்ளது.

எங்கே போயின கருப்பு பணத்தை ஒழிக்கும் 2,000 நோட்டுகள்?:
2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லை என்ற குற்றச்சாட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் சர்ச்சையாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஏப்ரல் 2019க்குப் பிறகு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என்று கூறினார். மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய வங்கியுடன் கலந்தாலோசித்து அரசு முடிவு செய்யும் என்று கூறினார்.

2017-18 ஆம் ஆண்டில் 11.15 கோடி புதிய நோட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டதில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது கணிசமான அளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 2020 இல், ஏடிஎம்களில் ரூ. 2000 அல்ல, ரூ. 500 மற்றும் ரூ. 100 நோட்டுகளை அதிக அளவில் வழங்குவதற்காக மறுசீரமைப்பு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. வங்கிகள் ரூ.2000 நோட்டுகளை ரூ.500 என்று மாற்றி ரூ.2,000 நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்ற நிலை ஏற்பட்டாலும், அவை படிப்படியாக நீக்கப்படும் என்ற எண்ணம் தோன்றியது. இதனையடுத்து தான்,
2000 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக ரத்து செய்ய வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தி வதந்திகளுக்கு முடிவுரை எழுதினார்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிக மதிப்புள்ள நோட்டுகளுக்கான தேவை குறைந்த மதிப்புள்ள கரன்சிக்கான தேவையை விட அதிகமாக இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியது.

மிகவும் ஒரே மாதிரியான போலி நாணயத்தாள்களும் தயாரிக்கப்படுவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், தற்போதைய சூழலில், 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கமானது பெருமளவு இல்லாமல் போயுள்ளதை கவனிக்க வேண்டி இருக்கிறது.

கருப்பு பணம் ஒழியவில்லையா?:
2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்தது என்பது இரண்டு விஷயங்களை நமக்கு சொல்கிறது. ஒன்று 2,000 ஆயிரம் நோட்டுகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். மற்றொன்று, 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செலவழிக்கும் அல்லது புழக்கத்தில் இருக்கும் நிலையில் சாமானியர்களின் பொருளாதாரம் இல்லை. அதாவது, மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துவிட்டதை ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை பட்டவர்த்தனப்படுத்திவிட்டது. 2,000 ரூபாய் பணத்தை பயன்படுத்தும் புழக்கத்தை மக்கள் குறைத்துக்கொண்டுள்ளார்கள்.
புழக்கத்தில் உள்ள அனைத்து வகை ரூபாய் நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி 13,053 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12,437 கோடியாக இருந்தது.

வெள்ளியன்று வெளியிடப்பட்ட 2021-22 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ரிசர்வ் வங்கி அறிக்கையின் மார்ச் 31, 2022 நிலவரப்படி, ரூ.500 மதிப்பிலான மதிப்பு அதிகபட்சமாக 34.9 சதவீதமாக உள்ளது. அதைத் தொடர்ந்து ரூ.10 மதிப்புள்ள வங்கி நோட்டுகள், இது புழக்கத்தில் உள்ள மொத்த வங்கி நோட்டுகளில் 21.3 சதவீதமாக இருந்தது.

100 ரூபாய் தாளில் வாழும் மக்கள்:

2000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளின் மதிப்பில் ஒரு சிறிய சதவீதத்தையே கொண்டுள்ளது என்பதை பார்த்தோம். அதன் மதிப்பு மார்ச் 2021 இன் இறுதியில் 22.6 சதவீதத்திலிருந்து 17.3 சதவீதமாகவும், மார்ச் 2022 இறுதியில் 13.8 சதவீதமாகவும் குறைந்தது. இந்த இடத்தில் ரிசர்வ் வங்கி சுட்டிக்கட்டியுள்ள புள்ளி விவரங்கள் ஒரு விஷயத்தை தெளிவாக்கியுள்ளன. அதாவது, 500 ரூபாய் தாள்களை விட 100 ரூபாய் பணத் தாள்களையே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சாமானியர்களை வெகுவாக பாதித்துள்ளது. கடைகளில் 2,000 ஆயிரம் ரூபாய் தாள்களை மாற்றுவதில் சிரமம் இருப்பதும், அதனால், 100 ரூபாய் தாள்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதும் தெரிகிறது. அதே சமயத்தில், 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெருமளவு வங்கி இணைய பரிவர்த்தனைக்கு பெருமளவு உதவியாக இருப்பதால், அதனை பெரும்பாலும் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவர்கள் பயன்படுத்துகிறார்கள். சாமானியர்கள் பயன்படுத்த தயங்கும் 2,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் கருப்பு பணமாக உருவெடுக்கிறதா என்ற சந்தேகமும் வருகிறது.

போலி ரூபாய் நோட்டுகள் அதிகரிப்பு:

500 ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுகள் 101.93 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி கண்டறிந்துள்ளது. அதே நேரத்தில் ரூபாய் 2,000 போலி நோட்டுகள் 54 சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
நிசர்வ் வங்கியின் அறிக்கையில் மேலும், 22ஆம் நிதியாண்டில் 10 ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுகள் 16.45 சதவிகிதமும், 20 கள்ள நோட்டுகள் முறையே 16.48 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே போல், போலி 200 ரூபாய் நோட்டுகள் 11.7 சதவீதம் உயர்ந்துள்ளது.
50 ரூபாய் நோட்டுகள் 28.65 சதவிகிதம் போலியாக அச்சடிக்கப்படுகிறது. அதே போல், 100 ரூபாய் கள்ள நோட்டிகள் 16.71 சதவிகிதம் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளதும் 6.9 சதவீதம் ரிசர்வ் வங்கியிலும், மீதமுள்ள 93.1 சதவீதம் மற்ற வங்கிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.