தவறுதலாக தனது வங்கிக் கணக்குக்கு வந்த ரூ. 13 கோடி குறித்து வங்கி அதிகாரிகளுக்கு முறையாக தெரிவித்த நபரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை தியாகராய நகர் பர்க்கிட் சாலையில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கிக் கிளையில்
இருந்து தவறுதலாக 100 வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு தலா ரூ. 13 கோடி
கிரெடிட் ஆகியுள்ளது. திடீரென தங்களது வங்கிக் கணக்கில் ரூ.13 கோடி வந்ததை
அறிந்த வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். 100 பேர் மட்டுமின்றி மேலும் சில வாடிக்கையாளர்கள் கணக்கில் ஒரு லட்சம் முதல்
பல லட்சம் ரூபாய் தங்களது வங்கிக் கணக்கில் இருப்பு இருந்துள்ளது.
இதுபோன்று தனது கணக்கில் இருப்புத் தொகை கோடிக்கணக்கில் காட்டுவதாக முகமது அலி என்பவர் தான் வங்கி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். முகமது அலி சென்னை தி.நகர், கோடம்பாக்கம், ரிச்சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் கணினி உபகரணங்கள் விற்பனை செய்து வருகிறார். அவரது கரண்ட் வங்கிக் கணக்கில் 66 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. மறுநாள் தனது வங்கிக் கணக்கில் கிரெடிட் கார்டு மூலம் கொடுத்த பொருட்களுக்கு பணம் வந்துள்ளதா என சோதனை செய்தபோது அதில் கூடுதலாக 13 கோடியே 40 லட்சம் ரூபாய் இருந்துள்ளது.
இது தொடர்பாக, முதன்முதலாக வங்கி அதிகாரிகளுக்கு முகமது அலிதான் தகவல்
கூறியுள்ளார். ஆனால், வங்கி அதிகாரிகள் நம்பவில்லை. இதையடுத்து தனது வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியதை ஸ்டேட்மெண்டாக அனுப்பியுள்ளார். அதன்பின் தான் வங்கி அதிகாரிகள் இது போன்று எத்தனை பேருக்கு பணம் சென்றுள்ளது என ஆய்வு செய்தபோது, பலருக்கும் இது போன்று தவறுதலாக கோடிக்கணக்கில் பணம் இருப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த வங்கிக் கணக்குகளை எல்லாம் முடக்கி பிரச்னையை சரிசெய்துள்ளனர்.
இதுகுறித்து நீயூஸ் 7 தமிழுக்கு முகமது அலி அளித்த பேட்டியில், இதுபோன்று பணம் கோடிக் கணக்கில் தமது கணக்கில் வந்தாலும் ஆண்டவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். எனவே, வங்கி அதிகாரிகளுக்கு முறையாக தகவல் அளித்ததாக தெரிவித்தார். மேலும், ஹெ.டி.எப்.சி. வங்கி தனது வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது என்றார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றதா என்று வங்கி
உயரதிகாரிகள் ஆய்வு நடத்தினர். முதல்கட்டமாக இந்த தொழில்நுட்பக் கோளாறு
சாப்ட்வேர் அப்டேட் செய்ததால் ஏற்பட்ட குளறுபடி என வங்கி நிர்வாகம் தரப்பில்
விளக்கம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தவறுதலாகப் பணம் சென்ற நபர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அதனை சரிசெய்த பின்னர் வங்கி நிர்வாகம் மீண்டும் வாடிக்கையாளர்களிடம் வங்கிக் கணக்குகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.








