சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்கள் வாங்க அதிகளவில் மக்கள் குவிந்தனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று அதிகளவில் மீன் பிடித்து வருகின்றனர். விடுமுறை தினமான ஞாயிற்று கிழமைகளில் பொதுவாக கூட்டம் அலைமோதும் நிலையில், இன்று ஆடி மாதத்தின் இரண்டாவது ஞாயிற்று கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. மீன்களின் வரத்தும் அதிகமாக இருந்ததால், அவற்றின் விலையும் சற்று குறைந்திருந்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிய வகை மற்றும் சிறிய வகை மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மீன்கள் அதிகளவில் விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வஞ்சிரம் மீன் ஒரு கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரை விற்பனையானது. கொடுவா மீன் 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் 500 ரூபாய்க்கும் விற்பனையானது. இறால் கிலோ 400 ரூபாய்க்கும், நண்டு கிலோ 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- பி.ஜேம்ஸ் லிசா







