கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்துக்கு உணவக சிலிண்டர் வெடித்ததே காரணம்! அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!!

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடித்து விபத்துக்குள்ளானதற்கு உணவக சிலிண்டர் வெடித்ததே காரணம் என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.…

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடித்து விபத்துக்குள்ளானதற்கு உணவக சிலிண்டர் வெடித்ததே காரணம் என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் வெடித்து சிதறிய தீப்பிழம்புகள் உணவகத்தின் அருகில் உள்ள பட்டாசு குடோனுக்கும் பரவியிருக்கிறது. இதில் அங்கிருந்த பட்டாசுகளில் தீ பற்றவே அவை வெடித்து சிதறியிருக்கின்றன.

அதோடு வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் 3 வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களும் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர்.இந்த விபத்தில், பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, மகள் ருத்திகா, மகன் ருத்தீஷ், உணவக உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம், பில்லக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சிவா உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் வைக்க அனுமதி அளித்தது எப்படி என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடித்து சிதறிய விபத்து குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். அதில், பட்டாசு குடோன் வெடித்து சிதறியதற்கு சிலிண்டர் வெடித்தது தான் காரணம். தடயவியல் துறையினர் சிலிண்டர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் என அறிக்கை வழங்கி உள்ளனர். இவ்வாறு கிருஷ்ணகிரியில் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.