திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதன் ஒரு பகுதியாக தாம்பரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை, அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர மு.க.ஸ்டாலின் துடிப்பதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என கூறினார்.

இதையடுத்து, திருப்போரூர் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து தேர்தலில் வெற்றிபெற ஸ்டாலின் நினைப்பதாக குற்றம்சாட்டினார். காவல்துறை அதிகாரிகளை மிரட்டிவரும் திமுக, அராஜக கட்சி என்றும், அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்றும் முதலமைச்சர் விமர்சித்தார்.







